காணிச் சட்டமுறைகளை அரசாங்கம் மதிக்காமல் அபகரிக்கிறது! தடுத்து நிறுத்த 13வது திருத்தச் சட்டம் வேண்டும்! சி.சிவமோகன்

sivamokanகாணிச் சட்டமுறைகளை மதிக்காமல் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் எமது பூர்வீக நிலங்களை அபகரித்து வருகின்றது. இதைத் தடுக்க மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தேவை என முல்லை மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் நேற்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றகையில்,

இந்த வடமாகாண சபைக்கு அறுதிப் பெரும் பான்மையுடன் அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு மக்கள் வழங்கிய ஆணை வெறுமனே எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மட்டும் எதிர்பார்த்து அல்ல. யுத்தம் முடிவடைந்த பின் இந்த அரசாங்கம் எம்மை பல வழிகளிலும் நசுக்கவதற்கு எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும் அவர்களின் சுதந்திரமான நல்வாழ்வை எதிர்பார்த்துமே வாக்களித்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

எமது முதலமைச்சர் தனது கன்னி உரையிலே தெரிவித்தது போன்று, எமது மக்களின் நல்வாழ்வுக்கு நல்ல அடித்தளம் இடப்பட வேண்டுமாயின், காணி, பொலிஸ் அதிகாரங்கள் இச் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியது மிக மிக அவசியமானதாகும். அதில் இருந்து இச் சபை பின் நிற்கக் கூடாது.

வடகிழக்கு பிரதேசங்களில் 30 வருட காலமாக தமிழ், முஸ்லீம் மக்களின் பூர்வீக காணிகளின் உரிமைகளை வழங்க மறுத்தமை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களின் தவறு. இதேவேளை வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை எடுத்துக் கொண்டால், நிரந்தர காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை, நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை, காணி அபிவிருத்திச் சட்டங்களின் கீழ் காணி வழங்கும் நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆண்டு வரையான காலப்பகுதியில் எமது மக்கள் இடம்பெயர்ந்துள்ளமையை சாதகமாக பயன்படுத்தி இராணுவம் அவர்களது காணிகளை பறிமுதல் செய்வதில் ஈடுபட்டு வருகின்றமை யாவரும் அறிந்த விடயம்.

அரச காணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் எமது அதிகாரிகள் கூட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது அவர்களின் இயலாமை என்பது எம்மால் உணரப்பட்டுள்ளது. எமது மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்பட்டு அவை இராணுவத்தின் தேவைகளுக்காகவும் பெரும்பான்மை இன மக்களை எமது பிரதேசத்தில் குடியமர்த்துவதற்குமாகவே முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு வருவதன் மூலம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த எமது மக்களை இல்லாதொழிப்பதற்கான முதல் கட்ட வேலை இடம்பெற்று வருகிறது. மக்களும் அவ்வாறே கருதுகிறார்கள்.

எமது பிரதேசங்களில் குடியமருவதற்காக கொண்டுவரப்பட்ட பெரும்பான்மை இன மக்களுக்கான காணி வழங்கல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் எதனையும் பின்பற்றாமல் காணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த அரசாங்கம் செய்து வருகிறது. தற்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள புதிய சுற்று நிருபத்தின் படி இலங்கை குடிமகன் ஒருவருக்கு அரை ஏக்கர் என்ற அடிப்படையில் காணி வழங்கப்பட வேண்டும் என்று காணிக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அது முற்று முழுதாக எமது மக்கள் பூர்வீகமாக கொண்டுள்ள காணிகளை அபகரிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டது என்பதை யாவரும் அறிவார்கள். கடந்த 2010 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு பிரதேச மக்களின் 30 ஏக்கர் காணிகள் எந்தவிதமான காணிச் சட்டங்களையும் பின்பற்றாமல் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற போதும் இராணுவ முகாம்கள் மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருக்க முடியுமா என்பதை ஒரு கேள்வியாக இந்த சபையிலே முன்வைக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு காணி வழங்கல் நடைமுறைகளை செயற்படுத்த உரிய ஒழுங்குகள் எமது மாகாண சபையால் முன்னெடுக்கப்பட வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்களே எமது மக்களின் உண்மையான வாழ்வினை உறுதிப்படுத்தக் கூடியவை. இதைப் பெற்றுக் கொள்வதற்கு எமது சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அதிகாரங்களை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு எமது சபை இடர் பாடுகளை எதிர்நோக்குமாகவிருந்தால் சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கு எமது சபை பின்னிற்கக் கூடாது. அத்துடன் 13வது திருத்தச் சட்டங்கள் பூரணமாக அமுல் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை தேவை.

எமது மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற போது பல நிர்பந்தங்களுக்கு உள்ளாக வேண்டி ஏற்படும். அதனையும் பெருட்படுத்தால் எமது மக்களுக்காக உழைக்க வேண்டும்.

ஆகவே, எமது மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக புலம் பெயர்ந்த தமிழர்கள், இந்திய நாட்டில் வாழும் தமிழ் மக்கள், ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைத்து உலகப் பிரஜைகள் அனைவரினதும் ஆதரவை தொடர்ச்சியாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக இராஜதந்திரமாக நாம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply