பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே இலங்கை வந்துள்ளதாக செனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்றே தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 04 தொலைக்காட்சியில் கானொளிகளை வெளியிட்ட ஊடகவியலாளர் கெலம் மக்றேயின், இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று விமான நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
காணாமற்போன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
நேற்று மாலை வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், கெலம் மக்றே இலங்கை வருவதற்கு வீசா வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கெலம் மக்றேயுடன் வருகை தந்த குழுவினர் சுமார் 30 நிமிடங்கள் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இதன்போது செனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்றே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
கெலம் மக்றே கூறியதாவது,
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இங்கு என்ன நடக்கின்றது என்பதை ஆராய்ந்து, அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன். அத்துடன் இங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் எழுதவுள்ளேன். இங்கு என்ன நடக்கின்றது என கேள்வியெழுப்பவுள்ளேன். இலங்கையில் என்ன நடக்கின்றது? பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் என்ன நடக்கின்றது?.
இதேவேளை, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கெலம் மக்றேயின் வருகை தொடர்பில் ஊடகவியலாளர்களால் வினவப்பட்டது.
கெஹலிய ரம்புக்வெல்ல கூறுகையில்,
டேவிட் கெமரூன் உடன் 30 பேர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர். அவர்களில் இவரும் ஒருவர். அவர் பாதுகாப்பு கருதியே, இந்தக் குழுவுடன் வந்துள்ளார் என நான் நினைக்கின்றேன். வீசா வழங்குவது தொடர்பில் விமான நிலையத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஏனைய 29 பேரும் வருகைதரும் போது, ஒருவருக்கு மாத்திரம் வீசா மறுக்கப்படுவது சரியான விடயமல்ல. அவர்களின் மனசாட்சிக்கு அமைய நடந்துகொள்ளுமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளோம். இங்கு என்ன நடக்கின்றது என்பதை நேரில் வந்து பார்ப்பதற்கு நாம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம். இதன் பின்னரேனும் அவர் மனசாட்சிக்கு அமைய, செயலாற்றும் சிறந்த ஊடகவியலாளராக மாறக்கூடும் எனத் தெரிவத்தார்.
















