இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் 300 பேர் மதுரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் எதிர்வரும் 15ஆம் திகதி பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பல்வேறு தமிழ் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்காக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்வார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் இன்று (12.11.13) கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், வணிகர் சங்க பேரவை உள்பட 21 அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
இதனையொட்டி பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ரயில் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வைகோவும் அவருடன் ரயில் மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் 300 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
















