ஒரு பச்சிளங் குழந்தையின் பசிக்கதறலும், ‘கிரிஸ் 3′ யின் 203 கோடி வெற்றிக் கொண்டாட்டமும்!

krrish3203 கோடி ரூபாயை வசூல் செய்த கிரிஸ் 3 படத்தின் வெற்றிக்கு காரணமாயிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று சென்னை வந்திருந்தார் பிரபல ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன். கூரவே அவரது அப்பா ராகேஷ் ரோஷனும்…

2:30 மணிக்கு வருவார் என்று சொல்லப்பட்டிருந்தால் அப்போதே நிசத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

எல்லோருமே தமிழ் தெரியாத ஹிந்தி மாலுமே குருப்பு தான். அவர்களுடைய ட்ரெஸ்சென்ஸ் மற்றும் கைகளில் வைத்திருந்த பல பிராண்டுகளின் உயர்ரக போன்களும் அவர்கள் எல்லோருமே பணம் படைத்த பெருந்தலைகளின் வீட்டுப் பிள்ளைகள் என்று அப்பட்டமாக காட்டியது.

சில பெண்கள் தங்கள் கணவன்மார்களுடன், சிலர் அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி, குழந்தைகள் என மொத்த குடும்பமுமாக வந்திருந்தார்கள்.

அதில் ஒரு பெண் தன் கணவருடன் கூடவே ஒரு வயது கை குழந்தையையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்.

சுமார் 4 மணிக்கு வாக்கில் தியேட்டருக்குள் நுழைந்த ஹிரித்திக் ரோஷனை பார்த்தவுடன் அங்கு குழுமியிருந்த ரசிகர் கூட்டம் விசிலடித்து அவர் உற்சாகப்படுத்தியது. சிலர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தார்கள், சிலர் அவரை தங்களது போனுக்குள் புகைப்படமாக அடக்க முற்பட்டார்கள்.

விசிலடித்தார்கள், உற்சாகக் குரல் கொடுத்தார்கள், ப்ளையிங் கிஸ்களை பரிமாறிக் கொண்டார்கள். இந்த வைபவங்கள் முடிந்தவுடன் அந்தப்படத்தின் ட்ரெய்லர் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

அதுவும் முடிந்தவுடன் ஹிரித்திக் ரோஷன் உட்கார்ந்திருந்த மேடைக்கு மிக அருகில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

ஆமாம் அது ஒரு பெண் குழந்தை.., அது எதற்காக அழுகிறது? என்பதைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் அவரது அம்மா தனக்கு முன்னால் மேடையில் இருந்த ஹிரித்திக் ரோஷனைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த குழந்தையின் அழுகுரல் மட்டும் நிற்கவே இல்லை. அது எதற்காக அழுகிறது? ஏன் அழுகிறது? அந்தக்குழந்தைக்கு பசிக்கிறதா..? அல்லது ஏதாவது பூச்சி கடித்து விட்டதா..? இப்படி எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் அவர் ஹிரித்திக் ரோஷனுக்கு கை காட்டுவதிலேயே குறியாக இருந்தார்.

இதற்கிடையே மேடையில் இருந்த ஹிரித்திக் ரோஷனிடம் பிரஸ் நண்பர்கள் எல்லோரும் கேள்வி கேட்கலாம் என்றார்கள். ஆனால் முக்கால்வாசிக் கேள்விகளை கேட்டது அங்கு வந்திருந்த ரசிகர்கள் மட்டும் தான்.

அவர்கள் கேள்வி என்ற பெயரில் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், படம் நல்லாருக்கு… லவ்யூ ஸோ மச் என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்கள்.

சென்னை வந்து விட்டால் இங்குள்ள ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டுமே..? அதனால் ‘வணக்கம் சென்னை’ என்ற வார்த்தையை மட்டும் தமிழில் பேசி விட்டு ‘தமிழ்ப்படங்களில் சான்ஸ் கிடைத்தால் என்னுடைய அடுத்த படமே அதுவாகக் கூட இருக்கலாம்’ என்று ஹிந்தியில் சொன்னார்.

இப்படியே நேரம் போய்க் கொண்டிருக்க.., அந்த பச்சிளங் குழந்தையின் அழுகுரல் மட்டும் நின்றபாடில்லை. அதன் செகப்பான முகத்தை பார்த்தபோது அது அழுது அழுது இன்னும் சிவந்து போயிருந்தது.

அப்போது அருகில் இருந்த ஒரு பெண் நிருபர் தயவு செய்து குழந்தை வெளியில கூட்டிட்டு போங்க,, அது அழுகுற சத்தம் வீடியோவுல கேட்கும் என்று தனது கடமை உணர்ச்சியை காட்டினார்.

உடனே அந்த அம்மா தனது பின்னால் இருந்த கணவரைக் கூப்பிட்டு குழந்தையை வெளியில் கொண்டு போக அழைத்தார், ஆனால் அவரும் ஹிரித்திக் ரோஷனை தனது மொபைல் கேமராவில் படம் பிடிப்பதிலேயே கண்ணும், கருத்துமாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தையின் அழுகுரல் அதிகமாகியது, அதற்கு நன்றாக பசித்திருக்க வேண்டும், அதன் அடுத்தடுத்த செய்கைகள் அப்படித்தான் இருந்தது. உடனே அம்மா கையில் கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலை சாய்த்து குழந்தைக்கு கொடுத்தார். ஆனால் அது குடிக்க மறுத்து அழுதது.

அப்போதும் கூட அந்த அம்மாவுக்கு குழந்தையின் பசியைப் போக்க நேரம் இல்லை.

உடனே அருகில் இருந்த பலரும் அவரை சத்தம் போட வேறு வழியில்லாமல் தனது கணவரைக் கூட்டிக் கொண்டு தன் அபிமான ஹீரோவை பார்க்காமல் பாதியில் போகிறோமே..? என்ற வருத்ததுடன் தியேட்டரை விட்டு வெளியில் போனார்.

ஆனால் போன வேகத்திலேயே திரும்பி தியேட்டருக்குள் வந்தார். திரும்பி வரும் போது கையில் குழந்தை இல்லை. மாறாக அவர் சிரித்துக் கொண்டே வந்தார்.

இப்படியே உற்சாகமாக நடந்த ‘கிரிஸ் 3′ யின் 204 கோடி வெற்றி விழாவில் அந்த குழந்தை அழுகுரலுக்காக அர்த்தம் யாருக்குமே கேட்காமல் போய் விட்டது.

எங்கே போகிறது ரசிகர் கூட்டம்…???

Tags: , , ,

Leave a Reply