ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளை மன்னிக்க மாட்டோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பைக் கண்டித்தும் மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்ஜின் முன் நின்று மறியலில் ஈடுபட்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழரைக் கொன்றதன் மூலம் சர்வதேச குற்றவாளியாக இலங்கை அதிபர் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில், அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது சரியல்ல. ஆனால், அங்கு மாநாடு நடத்துவதன் மூலம் சர்வதேச குற்றவாளியான ராஜபக்ஷவைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் முயற்சியாக இந்தியாவே மறைமுகமாக மாநாட்டை நடத்துகிறது.
பிரதமர் பங்கேற்காவிட்டாலும், அவரது அமைச்சர் பங்கேற்கிறார். ஜனநாயக மரபை மீறியதாக நைஜீரியா, பாகிஸ்தான், உகாண்டா, தென்னாப்பிரிக்கா, பிஜி தீவு ஆகியவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டன. ஆனால், பல லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை நீக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்கு நிகராகப் போராடிய நோபல் பரிசு பெற்ற லெஸ்பின்டிட்டோ, காமன்வெல்த் மாநாட்டை அனைத்து நாடுகளும் புறக்கணித்தால் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்கிறார்.
ஈழப் போரின்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி அளித்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இக் கட்சிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.
காமன்வெல்த் மாநாடு நடப்பதால், ஈழத் தமிழர் பிரச்னை முடிந்துவிடாது. தமிழகத்தில் உள்ளோர் சாதி, மதம் பாராமல் தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை அகற்ற அதிமுக அரசு நீதிமன்றத்தில் மனுச் செய்தது கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானமும் முழுமையானதல்ல. இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலை குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நான்கு ஆண்டுக்குப் பிறகு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுவரை அவர் எங்கிருந்தார்? இலங்கை தமிழர் படுகொலை குறித்த குறுந்தகடை கேலி செய்தவர்தான் கருணாநிதி என்றார்.
















