இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு அழைப்புக் கிடைத்தாலும் செல்லமாட்டேன் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார்.
எமது மக்களின் பிரச்சினைகளை எம்மவர்களிடம் கூறியும் தீர்வு கிடைக்காமையினால் சர்வதேசத்திலிருந்து வருபவர்களிடம் இதனை எடுத்துக்கூறி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சிக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வலி.வடக்கில் மீள்குடியேற்றமாறு கோரி அம்மக்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டாம் நாளான நேற்று இப் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் விடயங்களை நேரில் கேட்டறிந்து கொண்ட முதலமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தம்மைத்தமது சொந்த நிலங்கிளில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், எமது மக்களின் பிரச்சினைகளை எம்மவர்களிடம் எடுத்துக்கூறிய பொழுதிலும் நீதியான தீர்வுகள் கிடைக்காமையினால் தற்பொழுது மக்களின் பிரச்சினைகளை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறி வருகின்றோம்.
இந்த வகையில் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் சாத்தியமான அனைத்து வழிமுறைகளிலும் முயற்சிப்போம். நாம் தற்பொழுது எமது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். நாம் பிரச்சினைகளில் ஈடுபடுவது சாதாரணமானவர்களுடனல்ல.
மாறாக இராணுவ வீரர்களுடனேயே எமக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைச் சரியான முறையில் முன்வைக்கவேண்டும். இதற்கு அரசும் இராணுவமும் தடைபோடும். ஆனால் நீங்கள் தற்பொழுது மேற்கொண்டு வருகின்ற வழியே சரியானதாக அமையும். இதனை நாம் முன்கொண்டு செல்லும் போது எமக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றார்.
இதேவேளை, இங்கு கூடியிருந்த மக்கள் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரினர். அப்பொழுது பதிலளித்த முதலமைச்சர், அதற்காகத்தானே நாம் இங்கு கூடியுள்ளோம் என்றார்.
இதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வீர்களா? என ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டபொழுது, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடிய சூழ்நிலை இல்லை. அதனால் நான் இம்மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டேன். எமது கட்சியின் முடிவுக்கு அமைய நான் இம் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளோம் என்றார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சி.சிறிதரன், ஈ.சரவணபவன் ஆகியோருடன் வடமாகாண சபையின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், வலி.வடக்கு மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
















