பாலியல் வன்கொடுமை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரித்தானியா வலியுறுத்தல்

willam-ukஇலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவிலும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளிலும் இலங்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினர் கைதிகள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொண்டு வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், நிலக்கண்ணி வெடிகள் அகற்றல், மாகாணசபை தேர்தல் நடாத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார்.

ஆனால் பாலியல் குற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர், யுத்தத்தில் கணவரை இழந்த 90000 பெண்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply