நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாக உள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை ஆஸ்திரேலியாவும் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோசம் எழுந்துள்ளது.
இந்தியாவும், கனடாவும் தமது பிரதமர்களை மாநாட்டில் கலந்துகொள்ளாது பகிஷ்கரித்து, மூத்த அமைச்சர்களை அனுப்புவது போன்று, ஆஸ்தி ரேலியாவும் பிரதமரை கொழும்புக்கு அனுப்பக் கூடாது என்ற குரல் அந்நாட்டில் வலுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பு வந்திருந்த ஆஸ்திரேலியாவின் மூதவை உறுப்பினர்களில் ஒருவரான லீ றைனோன், தாமும் நியூஸிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லொஜியும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றைக் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததைக் காரணம் காட்டி, தங்கள் இருவரினதும் கடவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர் என்றும், தாம் தங்கி இருந்த வாடி வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து மூன்று மணித்தியாலங்களாக குடிவரவு அதி காரிகள் விசாரித்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
லீ றைனோன், ஆஸ்திரேலியாவின் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அங்கத்தவர் அல்லர். எதிர்க் கட்சியைச் சேர்ந்த மூதவை உறுப்பினர்.
விசாரணை என்ற பேரில், மூன்று மணித்தியாலங்கள் தமது சுதந்திரத்தை இலங்கை அதிகாரிகள் பறித்துவிட்டதாக, தலைநகர் சிட்னியின் விமான நிலையத்தில் சென்று இறங்கியதும், அவர் மிகுந்த கோபத்துடன் கண்டித்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
ஆஸ்திரேலிய மூதவை உறுப்பினர் திருப்பி அனுப்பப்படும் அளவுக்கு இலங்கை அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்து, தமது நாட்டுக்குக் கொடுக்கும் அழுத்தம் செயல்வடிவம் பெறுமா? அது குறித்து எந்த வகையான உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளிப்படுமா என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் விசாவிலேயே கொழும்பு வந்தனர் என்றும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு முற்பட்டதாலேயே அவர்கள் விசாரிக்கப்பட்டனர் என்றும் எமது நாட்டு அரச அதிகாரிகள் நியாயம் கற்பித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் கடந்த சனிக்கிழமை வடக்கே வந்து இங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்து சென்றனர்.
வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறித்தும் அதனால் மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் குறித்தும், மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கை சார்ந்த இல்லாமைகளையும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துத் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்து சென்றனர்.
தமிழ் மக்களின் மிகக் குறிப்பாகக் குடாநாட்டு மக்களின் உண்மை நிலை வெளியார் மூலம் அனைத்துலக மட்டத்தில் வெளிவந்து விடக் கூடாது என்ற உள்ளார்ந்த நோக் கத்துடனேயே அவர்கள் விசாரிக்கப்பட்டனர் என்பது, பால் வெள்ளையாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவின் மூதவை உறுப்பினர் லீ றைனோனுடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, நியூஸிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லொஜியும் கொழும் பிலிருந்து அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்.
இதேவேளை தாம் இலங்கை மாநாட்டில் பங்குபற்றுவதால், அந்த நாட்டின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படாது என்று நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்திருப்பது, கொழும்பு அரசின் செயற்பாடுகளை அனைத்துலக அரசியல் தலைவர்கள் எதிர்விளைவாகவே நோக்குகிறார்கள் என்பதனை மறுபுறத்தில் தொட்டுக் காட்டுகிறது.
















