“30 வருட கால போர் முடிவுக்குக் கொண்டுவந்து மனித உரிமையின் முக்கிய அம்சமான, வாழும் உரிமையை இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், பொதுநலவாயத்தை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
30 வருடங்களாக நாட்டில் நிலவிய போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொதுமக்கள் தான் எமது பெறுமதிமிக்க சொத்து என்பதை மறந்துவிட முடியாது.
2007ஆம் ஆண்டு 15.2 வீதமாகக் காணப்பட்ட நாட்டின் வறுமைநிலை போர் முடிந்துள்ள நிலையில் இன்று 6.5 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் இடைக்கால இலக்கை கடந்து நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
போரின் பின்னர் நிலையான நல்லிணக்கம் மற்றும் சமரசத்தை நோக்கி நேர்மையான அணுகு முறையில் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டில் அனைத்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் உரிமை மதிப்பு இருக்கின்றது.
வறுமை பிரச்சினை குறித்து பொதுநலவாய அமைப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவு, குடிதண்ணீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் குறைத்து மதித்து அரசியல் பிரச்சினைகளைப் பற்றிக் கவனம் செலுத்த முடியுமா?
பொதுநலவாயத்தை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாகப் பயன்படுத்தாது, மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதங்க ளையும் இலங்கை மதிக்கின்றது.
ஏனையோர் செய்யாதவை தொடர்பில் தேடுவதை விடுத்து செய்தவை தொடர்பில் தேடிப் பார்ப்பதே எமது கடமையாக வேண்டும் என்று புத்த தர்ம போதனையிலுள்ள வசனமொன்றை எடுத்துரைத்து தனது உரையை முடித்துக் கொண்டார் ஜனாதிபதி.
















