பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், யாழ்ப்பாணத்திற்கு சென்று போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இன அழிப்பு போரில் சொந்தங்களையும், சொத்துக்களையும் இழந்து நீதி கிடைக்காதா? என ஏங்கிய ஈழத்து தமிழ் சொந்தங்களுக்கு டேவிட் கமரூனின் பயணம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்க தமிழ்நாட்டில் எத்தகைய எதிர்ப்பு எழுந்ததோ, அதே போன்ற எதிர்ப்பு கமரூன் பங்கேற்பதற்கு எதிராக இங்கிலாந்திலும் எழுந்தது. எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய அவர், ´´மாற்றங்களை ஏற்படுத்தவே நான் இலங்கை செல்கிறேன்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக இலங்கையில் நடத்தப்படும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்´´ என்று கூறியிருந்தார்.
அதன்படியே இலங்கை அரசு ஏற்படுத்திய பல்வேறு முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு யாழ்ப்பாணம் சென்ற கமரூன், வடக்கு மாநில முதலமைச்சர் விக்னேஸ்வரனையும், போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் சந்தித்து பேசியிருக்கிறார். வடக்கு மாநில முதல்– அமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தனி அலுவலகம் கூட இல்லாத நிலையில் அவரை யாழ்ப்பாணம் நூலகத்தில் கமரூன் சந்தித்து பேசினார்.
முதல்வருக்கே அலுவலகம் அமைத்துத் தராத சிங்கள அரசு, ஈழத்தமிழருக்கு எத்தகைய அதிகாரத்தை வழங்கும் என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார். தமிழர்கள் வசிக்கும் வாழவே தகுதியில்லாத குடிசைகளுக்குள் சென்று பார்வையிட்ட அவர், தமிழர்களின் துயரங்களை உணர்ந்து கொண்டிருப்பார். போரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்களை விசாரித்த அவர், ராஜபக்ஷ அரசின் போர்க்குற்றங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை உணர்ந்து கொண்டிருப்பார்.
இலங்கை விடுதலை அடைந்த 1948-ம் ஆண்டிற்குப் பிறகு வடக்கு மாநிலத்திற்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவரான கேமரூன், தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களை நேரில் பார்த்ததாகவும், இதை உலகிற்கு கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தமிழ் சமுதாயத்திற்கு அளித்திருந்த வாக்குறுதியை கமரூன் நிறைவேற்றி விட்டார். அவரது பயணம் இலங்கையின் போர்க்குற்றங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதில் ஐயமில்லை.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்பதில் இங்கிலாந்து பிரதமர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும், கடமையும் கொண்ட இந்தியா அதற்காக எதையும் செய்யாதது வருத்தமளிக்கிறது. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவும் சில தவறுகளைச் செய்திருக்கிறது. அந்தத் தவறுகளுக்கு இங்கிலாந்து பிரதமர் வழியில் பரிகாரம் தேடிக்கொள்ள இந்திய அரசும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
















