இனப்படுகொலையை நடாத்திய சிறிலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டினைப் புறக்கணித்து அதில் கலந்து கொள்ளாமல் விட்ட அனைத்து நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நன்றி கூறுகின்றது என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.பொதுநலவாய மாநாட்டினைப் புறக்கணிப்பதற்கு பல்வேறு வகையிலும் உதவிய புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டு உறவுகளுக்கும் தான் மதிப்பளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களுடைய எதிர்காலம் புலம் பெயர் தமிழர்களுடைய இறுக்கமான கட்டமைப்புடன் புரிந்துணர்வு அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று மாலை 2 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையினை புரிந்த சிறிலங்காவில் இம்முறை பொதுநலவாய அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடாத்தப்படுகின்றது. இம் மாநாட்டினை 3 நாடுகள் புறக்கணித்துள்ளது. இவற்றில் தமிழ் மக்கள் 10 வீதம் வாழும் மொறிசியஸ் நாடு சிறிலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகள் மீறல் போன்ற செயற்பாடுகளை அடுத்து மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவினை எடுத்தது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
குறிப்பாக கனடா, இந்தியா மற்றும் மொறிசியஸ் போன்ற நாடுகள் இம் மாநாட்டினைப் புறக்கணித்துள்ளது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டு உறவுகள் முழுமையான உதவிகளை வழங்கியுள்ளனர். இதனால் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் உறவுகளுக்கு நாங்கள் மதிப்பளித்து நன்றி கூறுகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்:- வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்ற நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு வரும் வரைக்கும் மக்களுடைய போராட்டம் தொடர வேண்டும்.
மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த காலங்களிலும் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளது. இனிவரும் காலங்களிலும் கட்சி பேதமின்றி மக்கள் போராட்டங்களுக்கு எமது கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். ஒரு மக்கள் போராட்டத்தின் வெற்றி என்பது, எந்த அரசாங்கத்தினை எதிர்த்து போராட்டம் நடாத்தப்படுகின்றதோ, அந்த அரசாங்கம் போராட்டம் மேற்கொள்ளும் மக்களின் ஆதரவு இல்லாமல் அவர்கள் மத்தியில் தன்னுடைய கருத்து உட்பட வேறு எந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்ற நிலைக்கு வரவேண்டும்.
வெறுமனே வெளிநாட்டு இராஜதந்திரிகள் இங்கு வரும் போது அவர்கள் முன்னால் போராட்டங்களை நடாத்துவதன் மூலம் நாங்கள் இராஜதந்திரிகளுக்கு ஒரு செய்தியை மட்டும்தான் கொடுக்க முடியும். போராட்டம் என்பது ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும். அது மக்கள் மயப்படுத்தப்பட்டாலே இலக்கினை அடையமுடியும்.
வடபுலத்தில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழ ஒன்றினையும் அமைத்து போராட்டங்களை விரிவு படுத்த நாம் முடிவு எடுத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
















