விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். தனித் தமிழீழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. வழக்கறிஞர் மாநாடு நேற்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சென்னையில், கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வு எனவும் இதற்கென பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத்தமிழர்களின் நியாயமான உணர்வுகளைப் பிரதிபலித்து அவர்களுக்கு அரசியலில் சமஉரிமையையும் சுதந்திரமான வாழ்வும் அமைய தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அந்தச் சுதந்திர தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடினர்.
சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாது என்ற காரணத்தால்தான் தனி ஈழக் கோரிக்கையும், அதற்கான போராட்டமும் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டன.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் மீதான தடை நியாயமற்றது.
எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும். உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
















