தமிழர்களின் திருநாள்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடு இன்று. இதனை முன்னிடடு வடக்கு கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்கள் தீபங்களை ஏற்றி இந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம். வழமைபோல இந்த ஆண்டும் மக்கள் விளக்குகள் ஏற்றி கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடியுள்ளனர்.
வன்னியில் உள்ள பன்னங்கண்டியில் அப்பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் கார்த்திகையில் எதற்காக தீபங்கள் ஏற்றப்படுகின்றன என்று பதற்றத்துடன் வந்து விசாரணை செய்துள்ளனர். மாவீரர் வாரம் என்று தீபங்கள் ஏற்றியதாகக் கருதியே படையினர் அவ்வாறு பதற்றம் அடைந்துள்ளனர்.
அதேவேளை கிளிநொச்சி அக்கராயன் எட்டாங்கட்டைப் பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக எரிந்துகொண்டிருந்த கார்த்திகை தீபத்தை படையினர் தட்டி விழுத்தி அணைத்துள்ளனர். அனுமதியில்லாமல் இவ்வாறு வீதியில் விளக்குகள் ஏற்றக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இம் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் வருவதனால் வீடுகளிலும் வீதிகளிலும் எற்றப்பட்டுள்ள கார்த்திகை விளக்குகளை கண்டு படையினர் மாவீரர் நாளுக்காக ஏற்பட்டவையா என குழப்பம் அடைந்து பதற்றமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாவீரர் தினமும் கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வந்ததும் அன்றைய தினம் வடக்கில் ஏற்றப்பட்ட தீபங்களை படையினர் அணைத்ததும் குறிப்பிடத்தக்கது.
















