அரசாங்கம் ஜனநாயகத்தின்படி செயற்படும் என்ற நம்பிக்கை இல்லை! மாவை சேனாதிராஜா

Mavai-Senathirajah1இந்த அரசாங்கம் ஜனநாயகத்தின்படி செயற்படும் என்ற சந்தேகம் எமக்கு இல்வை. ஏனெனில் எமது மக்களின் கோரிக்கைகளை ஜனநாயக ரீதியாக இந்த அரசாங்கம் அனுகவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நேற்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட தீப்பந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுடைய ஒரு முக்கியமான நாள் கார்த்திகைப் பெருநாள். மகிழ்ச்சியோடு அந்த நாளை கொண்டாட வேண்டிய எமது மக்கள் இன்று எண்ணெய் ஊத்துவது போல் கண்ணீரைச் சிந்தி இந்த தீப்பந்த போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டம் குறிப்பாக 2009 மே திங்களுக்குப் பிறகு போரின் இறுதியிலே ராணுவத்திடம் தங்களது பிள்ளைகளை, தங்களது தலைவர்களை, தங்களின் உறவுகளை சரணடைய விட்ட தாய்மார்கள், பெற்றோர்கள், சகோதரர்கள் எல்லோரும் இன்று எங்களால் இராணுவத்திடமும் அரசிடமும் கையளிக்கப்பட்ட என்னுடைய கணவன் எங்கே?, என்னுடைய பிள்ளை எங்கே?, என் அப்பா எங்கே?, என் அம்மா எங்கே என்று கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கண்ணீர் தான் தீயாக இன்று எரிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அந்த தாய்மார்களுடைய கண்ணீரை சாதாரணமாக கருதிவிட முடியாது. எங்களிடம் ஒரு பரம்பரை பரம்பரையாக கருத்து இருக்கிறது. ஏழை அழுத கண்ணீர் சும்மா விடாது என்று. அந்த உணர்வோடும் உறுதிப்பாட்டோடும் ஜனநாயக வழிகளிலும், அற வழிகளிகளிலும் மக்களது உரிமைப் போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருகிறோம். இன்னும் தொடர வேண்டும். இதனை இந்த கண்ணீர் உறுத்தி நிற்கின்றது.

தங்கள் உறவுகளையும் தேசத்தையும் விட்டு நிற்கின்ற எங்களுடைய ஆத்மாக்கள் அந்த ஆன்மாக்களுடைய வேண்டுகோள் அவர்களுடைய ஆதங்கம், அவர்கள் எதிர்பாராமல் படுகொலை செய்யப்பட்ட காரணத்தினால் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் மக்களுடைய இதயத்தை என்றுமே தோற்கடித்துவிட முடியாது. தமிழ் மக்கள் உணர்கின்ற உணர்வுகளை அடக்கி விடமுடியாது. எங்கு பார்த்தாலும் தாய்மார்களுடைய ஓலத்தை தான் கேட்டுவிட முடிகிறது. எங்கள் காதுகளிலும் இதயங்களிலும் அந்த ஓலங்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களுடைய கண்ணீர் மட்டும் அல்ல என்னுடைய கண்ணீரும் எப்பொழுதும் அந்த உறவுகளுக்காக வடிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல இந்த போராட்டத்தினுடைய அடிப்படை அந்த மக்களுக்கு விடிவு வேண்டும். தங்களுடைய உறவுகளையும் தங்கள் தலைவர்களையும் இழந்துவிட்டு நிற்கின்ற மக்களுடைய எதிர்கால வாழ்வாதாரம் அவர்களுடைய வாழ்க்கை, எங்களுடைய பண்பாட்டிலே கணவனை இழந்துவிட்ட ஒரு தாய் அவள் தன்னுடைய நெற்றியிலே எந்த பொட்டை இடுவது என்ற தனக்குள் ஏங்கிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகளை இழந்துவிட்ட தாய் என்னுடைய குழந்தைகள் எங்கே? எனது எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு நான் பெற்றெடுத்த அந்த குழந்தைகள் எங்கே? அந்த உழைப்பவன் எங்கே என ஏங்கிக் கொண்டிருக்கும் பெற்றோரை நாங்கள் பார்கிறோம்.

ஆனபடியால் தான் இறுதிக் கட்ட போரிலே யார் கொல்லப்பட்டார்கள், யார் அரசிடம் இருக்கிறார்கள், எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?, இவைகளுக்ளுக்கெல்லாம் அந்த மக்களுக்கு இருக்கிறார்களா? இல்லையா யாரால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எங்களால் கையளிக்கப்பட்ட அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பதில் கிடைக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

இந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எங்களால் மட்டுமல்ல சர்வதேச நாடுகளில் இருந்து நேற்று வரையிலும் இந்த குரல் ஒலித்துக்
கொண்டிருக்கிறது. இந்த போர் குற்றத்தை இழைத்திருக்கின்ற அரசாங்கம் ஜனநாயக அரசாங்கம் என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனநாயக ரீதியாக மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற அரசாங்கமாக இருக்க வேண்டுமானால் ஜனநாயக
ரீதியாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தந்திருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் தங்களுடைய இறதி சந்தர்பத்தை இந்த ஆணைகளின் மூலம் மேலும் வெளிப்படுத்தியிருக்கின்ற போதும் அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் மக்களது வாக்குகளுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்கவில்லை. இந்த அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும். திருந்த வேண்டும். இந்த அரசாங்கம் திருந்திக் கொள்ளும் என்றோ ஜனநாயக ரீதியாக எமது பிரச்சனைகளை தீர்கும் என்றோ எங்களிடத்தில் நம்பிக்கை வருவதாகவில்லை. ஆனபடியால் தான் நாங்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய இந்த போராட்டத்திற்கு எமது மண்ணைவிட்டு சென்றிருக்கின்ற புலம்பெயர் தமிழ் மக்கள், எமது அயலில் இருக்கின்ற இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் எல்லோரும் எங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

பலநாடுகள் படிப்படியாக ஜ.நா மனித உரிமை பேரவையில் இந்த அரசாங்கத்தை தோற்கடித்துள்ளது. இந்த மக்களுடைய காணாமல் போன குடும்பங்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுப் பெற்றிருக்கிறது. எங்களுடைய நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. எமது மண்ணில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும். அந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள குடியேற்றப்பட வேண்டும். என்றெல்லாம் தீர்மானங்கள் சொல்லுகின்றன. அதற்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய நிலத்தை பௌத்த சிங்கள தேசமாக மாற்றியமைக்க கூடியளவிற்கு பௌத்த குருமாரும் இராணுவமும் அழித்து வருகிறது. எங்களுடைய குடிப்பரம்பலை சிதைத்து வருகிறது.

எமது தேசிய இனத்தின் இருப்பை அழித்து விடுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கள் மக்களை மட்டும் அல்ல எமது மக்களின் எதிர்காலத்தையும் அழித்து விடுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தான்
எமது தேசத்தில் லட்சக்கணக்கான இராணுவத்தினரைக் குவித்து அவர்கள் எம்மை ஒழித்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாபடியால் இங்கு இருக்கின்ற இந்த தமிழ் சமுதாயம் வெளிநாடுகளில் உள்ள உறவுகள் எங்களுடைய நிலத்தை தமிழர்
நிலமாக பாதுகாப்பதற்கு போராட வேண்டும். அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இதனை நாங்கள் விட்டுவிட்டால் எந்த நிலத்திலே எமது தமிழ் ராச்சியத்தை உருவாக்குவது. என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துவிடும். இதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேசம் இந்த அரசாங்கத்திற்கு எதிராக இந்த அரசாங்கம் இழைத்து நிற்கின்ற போர் குற்றங்களை சர்வதேச நம்பதகுந்த ஒரு விசாரணையை நடத்த வேண்டும்.

அந்த சர்வதேச விசாரணையின் மூலம் தான் இந்த அரசாங்கத்தினுடைய உண்மைகள், ஏன் இந்த போர் ஆரம்பித்தது, இந்த அரசு எத்தனை கொலைகளை செய்திருக்கிறது, என்ற உண்மைகளை வெளியிலே கொண்டுவர முடியும். அவற்றை வெளியிலே கொண்டு வந்தால் தான் இந்த நாட்டினுடைய மக்களின் போராட்டமும் அதற்குரிய காரணமும் அதற்கான அரசியல் தீர்வும் இந்த மண்ணிலே ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும். அதை எட்டுவதற்கு எங்களுடைய மக்கள் தங்களுடைய பாதுகாப்பை பேண வேண்டும். எங்களுடைய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

எமது பண்பாடுகள் கலாசாரங்கள் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும். இதற்காக சர்வதேசம் தீர்மானங்களை நிறைவேற்றினால் மட்டும் போதாது. நேரடியாக இந்த நாட்டை தண்டிக்கக் கூடிய வகையில் சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடிய வகையில் சர்வதேச ரீதியாக இந்த நாட்டுக்கு எதிராக என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதனை ஜநா சாசனத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும். அதன் மூலம் தான் பாதிக்கப்பட்ட எமது மக்களை பாதுக்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். இதனை தான் நாம் வற்புறுத்தி நிற்கின்றோம். ஆகவே எங்களுடைய நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். என்ற தீர்மானத்தை நாங்கள் திரும்ப திரும்ப வலியுறுத்துகின்றோம். அதற்காக தொடர்ந்து போராடுகின்றோம். போராட வேண்டும். போராடா விட்டால் நாங்கள் அழிக்கப்பட்டு விடுவோம். எனவே தீப்பந்த போராட்டம் போன்று தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்த வேண்டும்.

இதற்காக மலையக மக்களுடனும் ஒன்றித்து போராட வேண்டும். இந்தியாவும், புலம்பெயர் மக்களும் இன்னும் எமக்காக குரல் கொடுக்கும் நாடுகளும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும். அதன் மூலமே எமது தீர்வை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply