“இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அனுமதி வழங்கி நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டார். பொதுநலவாய மாநாட்டை நடத்தி, அதன் இறுதிப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை அவர் அங்கீகரித்து விட்டார். இதை ஒருபோதும் எம்மால் ஏற்க முடியாது.”
இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி நேற்று அறிவித்தது. பொதுநலவாய மாநாடு என்ற போர்வையில் மனித உரிமை மாநாடு தான் இலங்கையில் நடைபெற்றது என்று ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
பொதுநலவாய மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 98 பரிந்துரைகள் உள்ளடங்குகின்றன. இவற்றுள் மனித உரிமைகள் குறித்தே அதிகமான பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் இந்த விடயங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. ஏனெனில், இந்த மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அரசு வெளிப்படுத்தவில்லை.
இந்த 98 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைச்சாத்திட்டதனூடாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைப் பொறி முறைக்கு இணங்கியுள்ளார்.
இதனூடாக நாட்டுக்குப் பெரும் அபாயம் ஏற்படப்போகிறது. சர்வதேச விசாரணைக்கு இடமளித்து இந்த அரசு நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டது. இதை எம்மால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
கின்னஸ் சாதனைபடைத்தது அரசு
பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸுடன் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக இந்தப் பொதுநலவாய மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு புகைப்படத்தை எடுப்பதற்காக ஆயிரத்து 400 கோடி ரூபாவை அரசு செலவிட்டுள்ளது.
இதற்காகத்தான் அரசு இந்த மாநாட்டையே நடத்தியது. மாநாட்டுக்கான செலவுகள் குறித்து அரசு நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஆயிரத்து 400 கோடி ரூபா செலவு செய்து நாடு அடைந்த பயன் என்ன?
சர்வதேச விசாரணைக்கு ஐ.தே.க. எதிர்ப்பு
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மாநாட்டை நடத்தி சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கான அனுமதியை அரசே வழங்கியுள்ளது என்றார்.
ஒரு தலைவருக்கு 70 கோடி ரூபா
பொதுநலவாய அமைப்பில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த 54 நாடுகளுள் 21 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே இலங்கை வந்துள்ளனர். இவர்களுள் ஒரு நாட்டின் தலைவருக்காக சுமார் 70 கோடி ரூபாவை அரசு செலவுசெய்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இடம் பெற்ற மாநாட்டில் 36 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றனர் என்றார்.
















