இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற பாலஸ்தீன அதிபருக்கு அழைப்பு

palastinஎதிரிகளாக இருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகள் பகைமையை மறந்து மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.

அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் நல்லெண்ணத்தின் அடையாளமாக 104 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சமீபத்தில் அறிவித்தார்.

இதில் முதல் கட்டமாக இஸ்ரேல் சிறையில் இருந்து 26 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, இஸ்ரேல் – பாலஸ்தீன குழுவினருக்கிடையே முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை கடந்த 14ம் திகதி தொடங்கியது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து கைகுலுக்கும் காட்சிகளை இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டன.

எனினும், பேச்சுவார்த்தை நடந்த இடம் பற்றிய தகவல்களை இரு நாடுகளுமே ரகசியமாக வைத்திருந்தன.

இதற்கிடையில், ஜெருசலேம் அருகேயுள்ள குவலாண்டியா அகதிகள் முகாமுக்குள் நுழைந்த சீருடை அணியாத ராணுவ அதிகாரிகள் யூசுப் என்பவரை கைது செய்தனர்.

அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ராணுவ அதிகாரிகளின் மீது கற்களையும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

அதிகாரிகள் அளித்த தகவலையடுத்து விரைந்து வந்த இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் 3 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்துல்லா, ´இதைப்போன்ற தாக்குதல்கள் எங்கள் மக்களுக்கு உலக நாடுகள் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்கின்றன´ என்று கூறினார்.

இஸ்ரேலுடன் இனி சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர முடியாது என பாலஸ்தீன அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மூண்டு வரும் பகைமையுணர்வை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக எங்கள் நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற வாருங்கள் என பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாசுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பெஞ்சமின் நேதன்யாகு நேற்று விடுத்த செய்தியில் ´இரு நாடுகளின் உறவுகள் தொடர்பான பின்னடைவை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலஸ்தீன அதிபரை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வந்து உரையாற்றுங்கள். நானும் உங்கள் நாட்டுக்கு வருகிறேன்.

எங்கள் நாட்டுக்கு வந்த யூத மக்களுக்கு இஸ்ரேல் மண்ணுடன் 4 ஆயிரம் ஆண்டு கால பழைமையான தொடர்புகள் உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் சமாதானம் உண்டாகி எங்கள் நாட்டின் ஆட்சி மற்றும் எல்லை தொடர்பாக பாலஸ்தீனியர்கள் உரிமை கோருவது முடிவுக்கு வந்து விடும்´ என்று கூறியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply