வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் அல்காமியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் (38வயது) 19.9.13 அன்று காணாமல் போயிருந்த நிலையில், இது வரை கண்டு பிடிக்கப்படாமையை கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வட மாகாணசபைத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சமயமே இவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் காணாமல் போனோரின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிசில் முறைப்பாடு செய்தும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக தாம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்ததுடன், எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் கண்டு பிடிக்கப்படாவிட்டால் தாம் பெருமளவிலான போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை ஆர்பபாட்டக்காரர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போன ஆசிரியர் கா. நீரூபனின் தாய் தந்தை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், இ. இந்திரராஜா உட்பட வவுனியா மாவட்ட வெகுஜன அமைப்புக்ளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.




















