பூநகரி பிரதேச மக்கள் மருத்துவ சுகாதார வசதிகள் இன்றி அவலநிலை! வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஒரு திறந்த மடல்

refugee4பூநகரி பிரதேச மருத்துவ சுகாதார வசதிகள் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒரு திறந்தமடல். மக்களின் அவலநிலையை புரிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பூநகரி மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

பூநகரியில் மருத்துவ சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பாக மக்கள் பலமுறை அதிகரிகளிடம் எடுத்து கூறி இருந்தாலும் எதுவித நடவடிக்கையும் மேற்கோள்ளப்பட்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக நாம் விபரம் திரட்டியதில் பல திடுக்கிடும் உண்மைகள்
தெரியவந்துள்ளது.

பூநகரி பிரதேச மக்களுக்கு பூநகரி பொது வைத்தியசாலை மிகவும் முக்கியமானது ஆகும். இது பூநகரியின் மைய பகுதியில் அமைந்துள்ளதோடு இவ் வைத்திய சாலையினால் கௌதாரிமுனை முதல் நல்லூர், முக்கொம்பன், அரசபுரம் ஈறாக செம்பன்குன்று, ஜெயபுரம் வரையான கிராம மக்கள் பயனடைகின்றனர். எனினும் பூநகரி பொது வைத்தியசாலை தற்போது வரை தற்காலிக மருத்துவமனை ஒன்றாகவே இயங்கி வருவது வேதனைக்குரியது. இதனால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பூநகரி பொது வைத்திய சாலைக்குரிய பழைய கட்டிடம் தற்போது முக்கியமான இராணுவ முகமாக இருந்து வரும் நிலையில் மருத்துவ மனைக்கு என சென்ற ஆண்டு புதிய கட்டடம் அமைக்கும் பணி ஜனதிப்பதி மகிந்தராஜபக்ச அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது எனினும் ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் அக் கட்டிடம் திறக்கபடாமல் இருக்கிறது. திறக்கப்படுவதற்குரிய அறிகுறியும் தென்படுவதாக தெரியவில்லை. தற்காலிக கட்டடம் ஒன்றில் செற்பட்டு வரும் வைத்திய சாலைக்கு ஆரம்பத்தில் அதாவது மக்கள் மீளக் குடியமர்ந்த ஆரம்பத்தில் தற்காலிக மருத்துவர் ஒருவர் பணிக்காக கிளிநொச்சி மாவட்ட பொது சுகாதார பணியகத்தால் நியமிக்கப்பட்டு இருந்தார். அவருக்கான ஊதியத்தினை ஆரம்பத்தில் யுனிசெப் அமைப்பினர் வழங்கி வந்தனர். அவர்கள் அதனை நிறுத்தியதினால் பல மாதங்களாக ஊதியம் இல்லாமல் சேவை ஆற்றிய மருத்துவர் நின்றுவிட்டார்.

இது இவ்வாறு இருக்க, தற்காலிகமாக நியமிக்கபட்டு இருந்த மருத்துவர் முழுமையாக மருத்துவ படிப்பினை முடிக்கவில்லை என்றொரு கதையும் அடிபடுகிறது. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதற்கு முழுமையாக பொறுப்பு கூற வேண்டியவர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாளரே ஆவார். அது மட்டும் இல்லாமல் இன்றுவரை பூநகரி வைத்திய சாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்கவில்லை. இதனால் மக்கள் பூநகரி அரச வைத்தியசாலை மீதுள்ள நம்பிக்கையை இழந்தது வருகின்றனர் .

தற்போது பூநகரி வைத்திய சாலையில் 1 மணி தொடக்கம் 5 மணி வரை நோயாளர் பார்வை நேரம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருப்பினும் கிளிநொச்சியில் இருந்து வரும் மருத்துவர் ஒழுங்காக வருவதில்லை. பல நாட்களில் 4 மணியளவில் வந்து 5 மணிக்கு எல்லாம் சென்று விடுகின்றார் என மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சென்ற வாரம் மருத்துவர் வராததையிட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட முனைந்த போதும் வைத்திய சாலை ஊழியர் ஒருவரின் சமாதானப்படுத்தலால் சாலை மறியல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் நாளொன்றுக்கு100 நோயாளருக்கு மேல் வரும் மருத்துவ மனையில் நோயாளர் அமருவதற்கு வெறும் 6 இருக்கைகளே உள்ளன. அவையும் மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. அந்த இருக்கைகளில் அவதானமாக அமரவிட்டால் அங்கேயே மருந்து கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது தொடர்பாக அங்கு கடமையாற்றும் ஊழியர்களிடம் கேட்ட போது தாம் கிளிநொச்சி சுகாதார பணிமனையில் கேட்டு பல மாதம் ஆகியும் பொருட்கள் தரவில்லை எனவும் தாம் என்ன செய்வது என வருத்தமுடன் பதில் அளித்தனர் .

இது தொடர்பில் பிரதேச வாசி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வைத்தியசாலை கட்டட பணிகள் முடிவுற்றும் அது திறக்கப்படாமல் இருப்பதும் நிரந்தர வைத்தியர் ஒருவரை தொடர்ந்தும் நியமிக்காமல் இருப்பதும் ஆரோக்கியமான விடயம் அன்று. இது எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இது தொடர்பாக கிளிநொச்சி சுகாதார பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியும் அசமந்தமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பூநகரி மக்கள் நஞ்சசை கூட மருந்து என்று ஒரு மருத்துவர் போல உள்ள ஒருவர் குடுத்தால் குடிப்பார்கள் என எண்ணி விட்டார்களோ? என்னமோ? இதில் ஒன்றையும் சுட்டி காட்ட விரும்புகிறேன் அண்மையில் ஒரு பொது நிகழ்வில் பூநகரியில் கலந்து கொள்ள கிளிசொச்சி பொது சுகாதார பணிப்பாளார் பூநகரி வந்திருந்தார். அந்நிகழ்வில் அவர் அருந்துவதற்காக வைக்கப்படிருந்த குடி நீர் போத்தலின் கலாவதி ஆகும் திகதி நெருங்கி விட்டதாக கூறி அதனை ஒழுங்கு செய்தவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்டார்.

ஆயினும் பூநகரியில் பல நூற்று கணக்கான மக்கள் சரியான மருத்துவ வசதி இன்றி சிரமப்படுவது தெரியவில்லையா அவருக்கு? இவ்விடயம் சுகாதார பணிப்பாளருக்கு மட்டும் அல்ல பல அரச அலுவலர்களுக்கும் தெரியவில்லை என்பது தான் வேதனை. ஏன் இதனை சொல்கிறேன் என்றால் பூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் ஒரு ஆலய நிகழ்வில் கலந்து கொண்ட போது உடல்நிலை சரி இல்லாட்டிலும் ஏன் நான் பூநகரி வைத்திய சாலைக்கு செல்வதில்லை தெரியுமா? அங்கு போனால் ஒரே அடியாக போக வேண்டியது தான் என்று நக்கலாக பேசியது காதில் கேட்டது. இப்படி தமது நலனில் மட்டும் அக்கறை காட்டி மற்றவர் எக்கேடு கேட்டலும் சரி என்று எண்ணுபவர்களை என்ன செய்வது? பொது மக்கள் மட்டும் அல்ல இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட இவ் விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தும் பயனில்லை .

இவற்றை எல்லாம் விட மோசமானது மகபேற்று மருத்துவ மனை ஆகும் .பூநகரி பகுதியில் உள்ள பெரும்பாலான கிராம தாய்மார்கள் கிளிநொச்சி மருத்துவ மனைக்கே செல்கின்றனர். எல்லோருக்கும் பிரசவ காலம் குறிப்பிட்ட நாளில் வருவது இல்லை என்பதோடு பலருக்கு முன்பே மருத்துவ மனையில் கொண்டு சேர்ப்பதற்கு வசதி வாய்ப்புகளும் அமைவதில்லை. இதனால் பூநகரி பொது வைத்திய சாலையில் இதற்கான வசதி வைப்பினை ஏற் படுத்தி கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும். புள்ளி விபரங்களை வைத்து பார்க்கும் போது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 க்கு மேற்பட்ட பிரசவங்கள் நோயாளர் காவு வண்டியிலேயே அதாவது கிளிநொச்சி அல்லது சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இவற்றோடு அண்மையில் பூநகரி கிராமங்கள் சிலவற்றில் கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மக்களுக்கு போதிய விழிப்புணர்வினை வழங்க தவறியமையை உணர்த்துகிறது. குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பாக மக்களுக்கு அறிவனை ஊட்டி தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தால் இந்த குற்றசாட்டு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும் .

சம்மந்த பட்டவர்கள் இவ்வாறான தேவையை உணர்ந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். தயவு செய்து எமது மக்களின் உயிர்களுடன் யாரும் விளையாட வேண்டாம் என தயவாக வேண்டுகிறோம். என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply