தனது கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி காதலிக்கு கட்டிவிட்டதாக போலீஸ்காரர் மீது, அவரது மனைவி போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். தனது கணவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா (வயது 32). பி.காம். பட்டதாரியான இவரது கணவர் போலீஸ்காரர். இவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கண்ணீருடன் அவர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் போலீஸ்துறையில் பணி புரிந்தார். என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகளுக்கும் தாயாக்கினார். தற்போது வேறு பெண்ணை காதலித்து, எனது கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி, அந்த பெண்ணுக்கு கட்டி, திருமணம் செய்து கொண்டார். புழல் போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்தேன். நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதன்பிறகு கோர்ட்டு உத்தரவின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணையில், எனது கணவர், எந்த பெண்ணையும் திருமணம் செய்யவில்லை என்று கூறிவிட்டார். அவர் திருமணம் செய்த பெண்ணும், தானும் யாரையும் மணக்கவில்லை என்று தெரிவித்துவிட்டார். ஆனால், அவர்கள் இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்ததற்கான போட்டோ ஆதாரம், மற்றும் இதர ஆதாரங்களை மனுவுடன் இணைத்துள்ளேன்.
மேலும் என்னோடு இனிமேல் வாழமாட்டேன் என்றும் எனது கணவர் சொல்லி விட்டார். எனது கணவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, மாதவரம் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
















