60 வருடகால அரசியல் போராட்டம் திசை மாற்றப்படுகிறதா? – அ.நிக்ஸன்

refugee3ஒருசில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதாலோ அல்லது ஆளுநரையும் உயர் அதிகாரிகள் சிலரையும் மாற்றியமைப்பதாலோ இனப்பிரச்சினை தீர்ந்து விடாது. அதிகாரப்பங்கீடு என்பது இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து வரவேண்டும்.
இனப்பிரச்சினை 2009ஆம் மே மாதத்தின் பின்னரான சூழலில் உயிரிழப்புகள், அழிவுகளை, வேதனைகளை தவிர எதுவும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது மீண்டும் மூச்சு விடக்கூடிய ஆரோக்கியமான நிலை உருவாகிவருகின்றது.

அதாவது கடந்த 60 ஆண்டுகாலம் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி சர்வதேச சமூகத்துக்கு உணர்த்தப்படுகின்றது. இலங்கையின் அரச பொறி முறை, அரசியல் யாப்புகள் பல்லின சமூகம் வாழக்கூடிய வகையில் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சூழல் தோன்றியுள்ளது. ஆனால் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸவரன் இனப்பிரச்சினையை அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களின நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு நிலைமையை மாற்ற முற்படுகின்றார். ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள் என்பது வேறு.

புரிந்து கொண்டவர்கள்:-

ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சி தலைவர்களின் ஆலோசனைகள் அல்லது அவர்களை சந்திப்பது கூட இல்லாமல் தன்னிச்சையாக செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினையின் அடிப்படை விடுபடுகின்றது. முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவது என்பதல்ல. அரசியல் வேறு அதுவும் 60 ஆண்டுகால அரசியல் போராட்டங்களில் அவ்வப்போது பதவி வகித்த அரசாங்கங்கள் ஜனாதிபதிகள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றினார்கள் என்பது பற்றிய தகவல்களை கூட்டமைப்பில் இருக்கின்ற தலைவர்களுடன் ஆலோசிப்பது அவசியம்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் மாகாண சபை உளுராட்சி சபை உறுப்பினர்களை கூட சந்தித்து உரையாடுவதன் மூலம் பலவிடயங்களை அறிந்துகொள்ளலாம். அடிமட்ட உறுப்பினரையும் சந்தித்து உரையாடுவதுதான் தலைமைத்துவ பண்பு. அரசாங்கம் அதிகாரங்களை வழங்க தீர்மானித்துள்ளது என்றும் ஆனால் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு சில தமிழ், முஸ்லீம் அமைச்சர்கள் அதனை தடுக்கின்றனர் என்று கூறுவதும் அரசியல் விளக்கமின்மையாகும். ஏனெனில் தமிழ் முஸ்லீம் அமைச்சர்களுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை. அவர்கள் அரசாங்கம் அல்லது ஜனாதிபதி சொல்வதை செய்பவர்கள். வடக்கு கிழக்கு மாகாணத்திற்குரிய அதிகார பங்கீட்டை தட்டிக் கேட்க முடியாத அல்லது தங்களையும் தங்களது கட்சியையும் வளர்த்துக் கொள்வதற்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர் என்பது வெளிப்படை.

திசை திருப்ப வேண்டாம்:-

ஆகவே 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தையும் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை மக்கள் மத்தியில் தமிழ்த் தலைவர்களே விதைக்கக்கூடாது. விக்னேஸ்வரன் கூறுகின்ற ஒரு சில தமிழ் முஸ்லீம் அமைச்சர்கள் தடையில்லை என்றால் அரசாங்கம் சகல அதிகாரங்களையும் வழங்கிவிடுமோ? 1948ஆம் ஆண்டு திருகோணமலையில் திட்டமிட்டு ஆரம்பித்த சிங்கள குடியேற்றம் இன்று நாவற்குழிவரை வந்து நிற்கின்றது. யாழ்ப்பாணம் பலாலியில் அன்று ஒரு இராணுவ முகாம் மாத்திரமே இருந்தது. ஆனால் இன்று வடக்கு கிழக்கில் 10 பேருக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் எண்ணிக்கைதான் கூடுதலாக உள்ளது. தமிழர்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்படுகின்றன. நிரந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. புதிய பௌத்த கோவில்கள் கட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சில அமைச்சர்கள்தான் காரணமா? இவ்வாறு கூறுவதால் 60 வருடகால அரசியல் போராட்ட வரலாறு மறைக்கப்படுகின்றது. அதற்கு தமிழத் தலைவர்களே உடைந்தையான நிலைமையும் ஏற்படுகின்றது.

சர்வதேச ஆதரவு நிலை

இன்று சர்வதேச ஆதரவு நிலை என்பது ஒரு சில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களின் செயற்பாடுகளை மாற்றியமைப் பதற்காகவா? அரசாங்கத்தை புனிதர்களாக்குவதற்கு அல்லது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற கருத்துக்கள் தமிழ்த் தலைவர்களிடம் இருந்து வருவது 60 வருடகால அரசியல் போராட்டத்துக்கு இழைக்கப்படும் அநீதி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இனப்பிரச்சினை என்பது அரசியலில் ஈடுபடுகின்ற தனிநபர்களுடன் சம்மந்தப்பட்டது அல்ல. ஐக்கியதேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் அல்ல. இது கண்டிய கலாசாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பௌத்த தேசியவாத சிந்தனை கொண்ட இலங்கை அரசுடனும் அதன் அரசியல் யாப்புடனும் சம்மந்தப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மாற்றி, ரணில் விக்கிரமசிங்கவை கொண்டுவந்தால் அல்லது மீண்டும் சந்திரிகா பண்டாரநாயக்காவை பதவியில் அமர்த்தினால் இனப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்பதல்ல. இவர்கள் தனிநபர்கள். மாற்றப்பட வேண்டியது இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அதன் அரசியல் யாப்பும். இந்த இடத்திலேதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பை மாற்றுவதற்காகவே 60 ஆண்டுகால போராட்டம் நடந்தது. இன்றும் அது ஏதோ ஒரு வழியில் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றது. பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு சென்றபோது மக்கள் இயல்பாகவே முன்வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் எந்த ஒரு அரசியல் கட்சியும் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்யவில்லை அது 60 வருட அரசியல் போராட்டத்தினுடைய தொடர்ச்சி.

மக்கள் வாக்களித்தனர்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வாக்களித்ததும் அந்த 60 ஆண்டுகால அரசியல் போராட்டதின் அடிப்படையில்தான். மாகாண சபைக்கு வாக்களித்மை ஆளுநரையும் பிரதம செயலாளரையும் மற்றும் சில அதிகாரிகளையும் ஒரு சில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களையும் மாற்றுவதற்காக அல்ல. தமிழ் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் இல்லை என்பதையும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பை ஏற்க முடியாது என்பதையும் வெளிப்படுத்தவே மக்கள் வாக்களித்தனர். ஆகவே தமிழர் அரசியல் எதனை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை சகல தரப்புடனும் ஒன்று சேர்ந்து தீர்மானியுங்கள். விக்னேஸவரன் முதலமைச்சராக வர வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு யோசப் உட்பட பல தரப்பினாரும் விரும்பினர் வேறு சிலர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர் என கூறியபோதும் இல்லை மக்கள் எதிர்ப்பர்க்கின்ற அரசியல் தீர்வை கொண்டுவரக்கூடிய சட்டப்புலமை இவரிடம் இருக்கின்றது என தமிழ் நாளேடுகள் நியாயப்படுத்தி எழுதியிருந்தன.

ஆகவே இனப்பிரச்சினை என்பதை தென்பகுதியை மையாகக் கொண்ட அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடாது தனிநபர்களுடன் பார்க்காது அரசியலமைப்புக்கு வெளியில் நின்று தீர்வு காணக்கூடிய ஏற்பாட்டுக்கு வழிசெய்வதே மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்குரிய நன்றியாகும். தமிழ்த்தேசியம் என்பதும் வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை என்பதும் தனிநாடு அல்ல. தமிழ் மக்களின் இறைமைக்கு ஏற்ற அரசியல் தீர்வு ஒன்றை கோருவதும் தமிழ் ஈழம் அல்ல. ஒன்றுபட்ட நாட்டிற்குள் இருக்கின்ற பல்லின சமூகங்கள் தத்தமது இறைமைக்கான அங்கீகாரத்தை பெற்று வாழ முடியும். உலகில் அதற்கான உதாரணங்கள் உண்டு. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள 50 மாநில அரசுகளும் 50 தேசங்கள் என்ற அடிப்படையில்தான் இணைந்துள்ளன.

Tags: ,

Leave a Reply