மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு என்னும் பெயரில் பொய்யான வேலைகள்! வடமாகாண கல்வி அமைச்சருக்கு அவசர கடிதம்

question2மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி குழு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு வடமாகாண கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்ட தீர்மானங்கள் மன்னார் மக்களது கருத்துக்கள் இல்லை என மன்னார் மக்கள் சார்பாக மன்னார் வலயக்கல்விப் பணிமனையில் முகாமையாளராக பணியாற்றும் ஏ.மடுத்தீன் என்பவரால் கடிதம் மூலம் வடமாகாண கல்வி அமைச்சருக்கும் பொறுப்பு வாயந்த அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்திக்குழு எனும் பெயரில் மன்னார் மாவட்டத்தில் ஓர் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவ்வமைப்பின் தீர்மானம் மாண்புமிகு வடமாகாண கல்வி அமைச்சர் அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிகழ்வில் கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் கலந்து கொண்டதாகவும் பத்திரிகை வாயிலாக அறிந்து மன்னார் மாவட்ட கல்விச் சமூகத்தினராகிய நாம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகின்றோம்.

மன்னார் மாவட்ட பிரஜைகள் என்ற வகையிலும் மன்னார் மாவட்ட கல்வி சமூகத்துடன் நெருங்கிய தொடர்பும் பங்களிப்பும் கொண்டவர்கள் என்ற வகையிலும் மேற்படி மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்திக்குழு அங்குரார்ப்பணம் தொடர்பாகவும் அக்குழுவினால் நிறைவேற்றப்பட்டு கௌரவ கல்வி அமைச்சருக்கு கையளிக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் எமது கடும் கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

இவ்வமைப்பானது மன்னார் மாவட்டத்தை எவ்வகையிலும் பிரதி நிதித்துவப்படுத்தவில்லை. மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பானது அங்குரார்ப்பணம் செய்யப்பட வேண்டுமாயின் மாவட்டத்தின் அனைத்து பிரதேச மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யத்தக்கதாக அமைக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வமைப்பில் அத்தன்மை காணப்படவில்லை.

மாவட்டத்துக்கு பொதுவாக ஓர் அமைப்பு உருவாக்கப்படும் போது பொதுவிளம்பரம் செய்யப்பட வேண்டும். பத்திரிகை வாயிலாக அல்லது பொது விளம்பரம் பாடசாலைகள், திணைக்களங்கள் மத ஸ்தாபனங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு அஸ்குரார்பணக் கூட்டம் கூட்டப்படிருக்க வேண்டும். ஆனால் இவ்வமைப்பு அவ்வாறு கூட்டப்படாது இன்று இவ்வமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டவரால் தொலைபேசி ஊடாக அவரது சாகாக்கள் சிலர் அழைக்கப்பட்டு இரகசியமாகவே கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் இனங்கள் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்ற நிலையில் இங்கு அமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அபிவிருத்தி குழுவில் ஒரு முஸ்லிம் கல்விமான் கூட அழைக்கப்படவுமில்லை தெரிவு செய்யப்படவுமில்லை ஏன் இந்த பாரபட்சம் இதன் காரணமாக மன்னார் மாவட்ட இஸ்லாமியர் கல்வி அபிவிருத்தி குழு என்ற அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிகள் நடைபெறுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

மன்னார் மாவட்டத்திற்கே கல்வியில் பெருமை சேர்க்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் கடமையாற்றுகின்ற பேராசிரியர்கள் குறிப்பிடத்தக்கவளவு இருக்கின்றபோதும் (குறிப்பாக பேராசிரியர் கஸ்புல்லா, பேராசிரியர் சூசை ஆனந்தன், கலாநிதி மொறாயல் போன்றவர்கள்) இவர்களுக்குக் கூட அறிவிக்கப்படாது ஓர் அமைப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு என உருவாக்கப்பட்டு இருப்பது சிலரின் உள்நோக்கத்திற்கு அமைய இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. என்ற ஐயப்பாட்டை தோற்றுவிக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் இரண்டு கல்வி வலயங்கள் காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த இரண்டு வலயங்களின் கல்விப் பணிப்பாளருக்கே தெரியாமல் மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு உருவாக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன.

மன்னார் மாவட்டத்தில கடந்த காலங்களில் கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்று தற்போதும் சமூகப்பணி செய்து கொண்டிருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இருவர் மாவட்டத்தில் இருக்கின்ற போதும் கூட அவர்களை அழைக்காது உருவாக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி குழு எவ்வாறு மாவட்ட கல்வி அபிவிருத்தி குழுவாக அமைய முடியும்.

மன்னார் மாவட்டத்தில் எத்தனையோ துறைசார் நிபுணர்கள் இருந்தும் கூட ஒரு துறைசார் நிபுணர் கூட அழைக்கப்படாது சுயநல நோக்கம் கொண்ட சிலர் கூட்டிணைந்து உருவாக்கி இருக்கும் அமைப்பு எவ்வாறு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக அமையும்.

மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், திணக்களத்தலைவர்கள் பலர் மாவட்ட கல்வி அபிவிருத்தியில் ஆர்வமுடனும் அக்கறையுடனும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தகவலுக்கு கூட ஒரு அறிவித்தல் இன்றி விசமத்தனமாக உருவாக்கப்பட்ட அமைப்பு எவ்வாறு மாவட்ட கல்வி அபிவிருத்தி குழுவாக அமையமுடியும்.

பொது விளம்பரம் செய்யப்பட்டு பொதுக்கூட்டமொன்றில் தெரிவு செய்யப்பட முடியாதவர்கள் தகுதி அற்றவர்களும் தாம் தலைவர்களாக வரவண்டுமென்பதற்காகவும் தமது சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காகவும், தமது விளம்பரப் பிரியத்துக்காகவும் இரகசியமாகவும் கபடத்தனமாகவும் உருவாக்கியுள்ள அமைப்பு உவ்வகையிலும் மாவட்ட கல்வி அபிவிருத்திp குழுவாக செயற்பட தகுதி அற்றதாகும்.

கல்விப் புலம் சாராதவர்களும், எக்காலத்திலும் கல்விப் பணி புரியாதவர்களும் தமது பதவி என்ன, தகுதி என்ன என அறியாதவர்கள் எல்லாம் கல்வி அபிவிருத்தி பற்றி பேசுமளவுக்கு மன்னார் கல்வி ஒன்றும் தரம் தாழ்ந்துவிட வில்லை. நாடே போற்றும் கல்வி மான்களும் துறைசார் நிபுணர்களும் உயர் திறன் கொண்டவர்களும் நிறையவே வாழும் மாவட்டம் இம்மாவட்டம்.

சுயநலம் சார்ந்த சிந்தனையுள்ளவர்களும், சுயவிளம்பரம் தேடும் ஒரு சிலரும் உருவாக்கியுள்ள இந்த அமைப்பானது எந்த வகையிலும் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது இவ்வமைப்பின் தீர்மதானம் மாவட்ட பொது தீர்மானமாக அமைய முடியாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி குழு என்ற மாவட்ட கல்வி அபிவிருத்திக்கான ஓர் உன்னத அமைப்பை உருவாக்குவதாக ஓர் மாயைக் காட்டி கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பனர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களையும் அழைத்து உள்ளனர் இதனால் இன்று அவரது நற்பெயருக்கும் இவர்களினால் அபகீர்த்து ஏற்படும் நிலை மன்னார் மாவட்டத்தில் தோன்றியுள்ளது.

இறுதியாக மன்னார் மாவட்ட கல்வி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட முறை தொடர்பாக எமது கடும் கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவிப்பதோடு, இவ்வமைப்பு எவ்வகையிலும் மாவட்ட கல்வி அபிவிருத்தி அமைப்பாக அமைய முடியாது என்பதுடன் இதனை ஏற்க முடியாது என்பதனையும் வலியுறுத்துவதோடு இக்குழுவாக் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எந்த வகையிலும் மாவட்ட பொதுத்தீர்மானமாக அமையாது என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply