பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒருங்கிணையுமாறு சர்வதேசத்துக்கு இலங்கை அறைகூவல் விடுக்கின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று ஆரம்பமான சர்வதேச கடற்பாதுகாப்புக் கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சில நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன. தனது இலட்சியத்தை எட்டுவதற்குத் திட்டமிட்டு அப்பாவிப் பொது மக்களை இலக்குவைத்து எதிரி தொடுக்கும் தாக்குதல் முறியடிக்கப்பட வேண்டும்.
எனவே, பயங்கரவாதத்துக்கு எதிரான சமர், உலகளாவிய சமராகும். பயங்கரவாதம் எங்கு தலையெடுத்தாலும் அது நசுக்கப்படவேண்டும். இது விடயத்தில் ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இதயபூர்வமாக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும்.
பயங்கர வாதத்தை முறியடிக்க முறையாகவும் ஒருங்கிணைந்தும் உச்சமட்டத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாடுகளுக்கிடையே நேர்மையான ஒத்துழைப்பு தேவை.
புலனாய்வு பரிவர்த்தனை, கடற்பிராந்தியம் தொடர்பான விழிப்புணர்வு, கூட்டுச் செயற்பாடுகள், இணைந்து ரோந்துப் பணிகள், உள்ளக தொடர்பு ஆகியவை கடற்படைகளுக்கிடையே அவசியம். பயங்கரவாத முயற்சிகளை முறியடிக்க ஒருங்கிணைவதற்கு இது ஒரு வழியாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அனுபவத்தை ஈட்டியுள்ளது. குறிப்பாக, கடற்புலிகளைத் தோற்கடித்தமையைக் குறிப்பிடலாம். இந்த அனுபவத்தின் வாயிலாக சர்வதேச கடலில் ஆர்ப்பரிக்கும் கடற்கொள்ளையை முறியடிக்கவும் இலங்கையால் முடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாத்திரமே கடற்படைப் பிரிவு இருந்துள்ளது. இலங்கைக் கடற்படைக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட தாக்குதல்களை நடத்த இக்கடற்படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
தற்போது கடற்கொள்ளையை முறியடிக்க தனியார் நிறுவன கப்பல்களுக்கும் இலங்கை ஆயுதங்களை அளித்து வருகிறது. வழங்கப்படும் ஆயுதங்கள், உபகரணங்கள் ஆகியவை தொடர்பாக பொறுப்புக்கூறும் கடப்பாடுகளை உத்தரவாதப்படுத் திக்கொள்வதற்காக முன்கூட்டியே எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
















