சர்வதேச விசாரணையும் தமிழ் மக்களும்

internetworldஇலங்கை சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் என்றும் இல்லாத அளவுக்கு தற்போது சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியாக தடை செய்து இலங்கையில் இடம்பெற்ற போருக்கு ஆதரவு வழங்கிய சர்வதேச நாடுகளே இன்று இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.

நடைபெற்று முடிந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அன்றிலிருந்து மஹிந்த தலைமையிலான அரசை சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாகத் துரத்தத் தொடங்கின.

அண்மையில் பொதுநலவாய மாநாட்டிற்கு வந்து சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் கடுமையான செய்தி ஒன்றினையும் மஹிந்த தலைமையிலான அரசுக்கு கூறிச் சென்றுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் பிரிட்டன் கோரும் என்பதே பிரிட்டன் பிரதமர் விடுத்துச் சென்ற எச்சரிக்கையாகும்.

ஆனால் இலங்கை அரசோ அதனைக் கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. டேவிட் கமரூன் கூறிய உடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கமரூன் செயற்படுகிறார் என இலங்கை அரசு வழமை போலவே குற்றஞ்சாட்டியுள்ளது.

அதாவது தமிழ் மக்களுக்கும், இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக யார் கதைத்தாலும் உடனே புலிச்சாயம் பூசுவது இலங்கை அரசின் ஒரு வழக்கமான செயற்பாடாக அமைந்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க இந்தியப் பிரதமர் இலங்கை வராமை வருத்தம் அளிப்பதாக மஹிந்த ராஜபக்­ தெரிவித்துள்ளார். உண்மையில் இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளமை இலங்கைக்கு மிகப்பெரிய அவமானமே.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஆயுத உதவிகளில் இருந்து அனைத்து உதவிகளையும் வழங்கியது இந்தியாவே என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் பொதுநலவாய மாநாட்டில் அதிகமாக பேசு பொருளாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே இருக்கப் போகின்றது என்று இந்திய அரசுக்கு தெரியும்

எனவே மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது இந்திய மத்திய அரசுக்குப் பெரும் பிரச்சனைகளை தோற்றுவிக்கும். எனவே கடிதம் எழுதியதுடன் மன்மோகன் தனது கடமையினை முடித்துக் கொண்டார்.

இந்தியப் பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியான விசாரணை நடத்த வேண்டும் இல்லை என்றால் சர்வதேச விசாரணை ஒன்றைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தியாக தான் இருந்திருக்கும்.

ஆனால் இந்திய பிரதமர் அவ்வாறு செய்வதற்கு துளிகூட வாய்ப்பில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் பொதுநலவாய மாநாட்டை மன்மோகன் சிங் புறக்கணிப்பதற்கு எந்தவிதமான காரணமும் கூறவில்லை.

அதாவது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறலின் காரணமாகவே இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கின்றேன் என்றும் கூட கூறவில்லை.

உண்மையில் மன்மோகன் மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு இந்தியாவில் இடம்பெறப் போகும் தேர்தலே முக்கிய காரணம். அங்குள்ள ஆறு கோடி தமிழ் மக்களைப் பகைத்துக் கொண்டு இலங்கை மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பெரும் வீழ்ச்சியைத் தான் கண்டிருக்கும்.

அத்துடன் இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ளது போல காட்டிக் கொண்டாலும் உண்மையில் அது இலங்கை அரசின் பக்கம் தான் இருக்கின்றது. அண்மையில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

“இலங்கை மீது சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டால் அதனை இந்தியா ஆதரிக்கும்” என்று கூறியுள்ளார். உண்மையில் அவ்வாறு விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் முதலாவதாக எதிர்க்கும் நாடு இந்தியாவாகத் தான் இருக்க முடியும், ஏனெனில் இலங்கையில் இடம்பெற்ற போருக்கு ஆயுத உதவிகள் தொடக்கம் அனைத்து வழிகளிலும் உதவியது இந்தியாவே என்பது வெளிப்படை.

எனவே கொலை செய்தவன் குற்றவாளி என்றால் கொலை செய்ய ஆயுதங்கள் கொடுத்தவனும் குற்றவாளியே. எனவே இந்தியா சர்வதேச விசாரணையினை எதிர்க்கும் என்றுதான் கூறவேண்டும்.

இது ஒருபுறமிருக்க இலங்கை அரசோ “சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்கப் போவதில்லை. உள்நாட்டு விசாரணையை நாங்களே நடத்துவோம். அவ்வாறு நடத்துவதற்கு கால எல்லை போதாது” என்று கூறிக் கொண்டிருக்கின்றது.

போர் முடிவடைந்து ஐந்து வருடங்களை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இறுதிக் கட்டத்தில் மீறப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இதுவரை எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் இலங்கை அரசு செய்ததாக தெரியவில்லை.

ஒரு திருடன் எந்த ஒரு காலத்திலும் தான் திருடன்தான் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டான். அது போலவே இலங்கை அரசும் தாம் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை, அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்களை தாங்களே விசாரிப்பதாக கூறுகின்றனர்.

இதனை எந்த ஒரு தமிழ் மகனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையே. இதனையே பிரிட்டன் பிரதமர் தன்னுடைய நாட்டில் வைத்து ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதாவது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முழுமையான சுயாதீனமுடையவையாக அமையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் இலங்கையின் அத்தனை செயற்பாடுகளுக்கும் பூரண ஆதரவை வழங்கி வந்த சீனா கூட “இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்குமாறும் அதனை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை இலங்கை அரசுக்கு மேலும் ஒரு நெடுக்கடியினை தோற்றுவித்துள்ளது.

உலகமே இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக கதைத்துக் கொண்டிருக்கும் போது, அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறப் போகும் மனித உரிமை கூட்டத்தொடர் இலங்கைக்கு சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஏற்கனவே காலக்கெடு ஒன்றை விதித்துள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் இன்னொரு காலக்கெடு ஒன்றை விதித்துள்ளார், இந்த இரண்டு கெடுவும் மார்ச் மாதம் இடம்பெறப் போகும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் கழுத்தை நெரிக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எத்தனையே ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ள போதும் ஏன் இலங்கை மீது சர்வதேச விசாரணை ஒன்றை கொண்டுவரவில்லை என்ற கேள்வியே தமிழ் மக்கள் மத்தியில் நான்கு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த வண்ணமே உள்ளது.

எனவே மார்ச் மாதம் நடைபெறப் போகும் மனித உரிமைகள் கூட்டத் தொடரிலாவது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் கனவு நிறைவேறுமா பலிக்குமா?

Tags: , , ,

Leave a Reply