இனிவரும் தேர்தல்களில் அரசை தோற்கடிப்பதற்காக பலம் வாய்ந்த புதிய வியூகங்களை ஜே.வி.பி. வகுத்துள்ளது என தெரிவித்தார் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த.
தமது புதிய கொள்கைகள் டிசெம்பர் மாதம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:
அடுத்த வருடம் நடை பெறவுள்ள மேல்மாகாண சபை தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியன குறித்து தற்போது கட்சிக்குள் கலந்தாலோ சிக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எம் அனைவரினதும் ஒரே நோக்கமாகும். இதற்காக நாம் மும்முரமாக செயற்பட ஆரம்பித்துவிட்டோம்.
தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசின் பலத்தை அடியோடு குறைத்து, அடுத்து நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதே எமது ஒரே இலக்காகும்.
மாகாணசபைத் தேர்தலை பொறுத்தமட்டில் மேற்கும், தெற்குமே எமது இலக்காகவுள்ளது. இந்த இரண்டு மாகாணங்களிலும் வெற்றி வாகை சூடுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
காரணம், நாம் வகுத்துள்ள கொள்கைகள் அந்தளவு பலம் வாய்ந்தவை. இதை நாம் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக வெளியிடுவோம். இந்த கொள்ளைகள் மட்டும் வெளிவந்து விட்டால் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது பிரதானமாக ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வகுக்கப்பட்டுள்ளது.
எமது கட்சியைப் பொறுத்த மட்டில் இன்னமும் தலைமைத்துவ மாற்றம் சம்பந்தமாக எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அப்படி தீர்மானங்கள் எடுத்தால் உடனே அறிவிக்கப்படும் என்றார்.
















