உலகெங்குமுள்ள தமிழர்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்கின்ற வேளையில் தாயகத்தில் ராணுவக்கெடுபிடி அதிகரித்துள்ளது. முல்லைத்தீவில் ராணுவக்கெடுபிடி மிகவும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
முல்லை நகர்ப்பகுதியில் ராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லையின் கடற்கரையோரப்பகுதி, கோயில்கள், தேவாலயங்கள், சந்தை, வர்த்தக நிலையங்கள் என அனைத்து பிரதேசங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் அதிகளவில் நடமாடி வருகின்றனர். இதனால் முல்லை நகர்ப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்று குறைந்துள்ளது.
இதே வேளை, நேற்றிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் வீட்டு வாசலின் முன்னர் சுமார் பத்திற்கு மேற்பட்ட படையினர் கண்காணித்துக்கொண்டு இருந்ததாக அப்பகுதியால் சென்ற கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலையிலிருந்து, ரவிகரன் வீட்டின் முன்னால் உள்ள தெருவில் 20 இற்கும் மேற்பட்ட படையினர் மாறி மாறி சைக்கிள்களில் ரோந்து செல்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த ரவிகரனின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் மாவீரர் தின ஏற்பாடுகள் என்ன? என்று நேற்று இரவு படைப் புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் உள்ள வைரவர் ஆலயத்தில் நேற்றிரவு முதல் மணி அடிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்கே தீபம் ஏற்றுவது குறித்தும் படையினர் எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களில் இரவில் இருந்த படை நடமாட்டத்தை விட இன்றைய நாளில் பகலில் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளது. திடீர் படைக் குவிப்பால் முல்லை நகர், கள்ளப்பாடு, தீர்த்தக்கரை, சிலாவத்தை ஆகிய பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, முள்ளிவாய்க்கால் மற்றும் புது மாத்தளனிலும் படைக்குவிப்பால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முள்ளி வாய்க்காலில் மக்களின் எண்ணிக்கையை விட படையினரின் எண்ணிக்கை அதிகமென தோன்றுமளவுக்கு படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்கிற பீதி நிலை முல்லைத்தீவு முழுவதும் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















