காலவெள்ள ஓட்டத்தில் புதிய புதிய நிகழ்வுகளால், பழையனவற்றை மறந்து கொண்டே வருகின்றோம். அதிலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்தவுடன், சொந்த மண்ணிற்கே உரித்தான பலவற்றைத் தொலைத்து விட்டு, இந்த இயந்திர வாழ்க்கையில், புதிய பலவற்றோடு மாரடித்துக் கொண்டு நிற்கின்றோம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்வின் இயல்புதானே என்று யாரோ தூரத்தில் முணுமுணுப்பது கேட்கின்றது. எங்கள் அடையாளங்களைத் தொலைத்து விட்டு, புதியனவற்றை ஆரத்தழுவுவதில் என்ன சுகம் வேண்டிக் கிடக்கின்றது?
சற்றே பின்னோக்கி நகருவோமா?
தென்னை மரத்தை விக்கட்டுகளாக்கி கிரிக்கட் விளையாடிய காலம் ஞாபகத்தில் இருக்கின்றதா? கரித்துண்டு எடுத்து, தென்னை மரத்தின் அடியில் மூன்று கோடுகளை இழுத்து, அதற்கு இரண்டு ஸ்டம்புகளும் வைத்து, பல ஒரு நாள் போட்டிகள் நடத்தியமை ஞாபகத்தில் இருக்கின்றதா? எதிர் முனையிலிருந்து வீசும் டென்னிஸ் பந்து, அந்தக் கோடுகளில் பட்டதோ இல்லையோ, அவுட் என்று ஆக்ரோஷமாகக் கத்தி, பலரை ஏமாற்றி விக்கட்டுகளைச் சரித்த சரிதம் யாருக்கு ஞாபகத்தில் இருக்கின்றது?
இராசான் தும்பி ஞாபகத்தில் இருக்கின்றதா? தும்பியில் பெரிய இனமொன்றைத்தான் சிறிய வயதில் இப்படி அழைத்தோம். இந்தத் தும்பியைப் பிடிப்பவர், எங்கள் சிறுவயதுக் காலத்தில் பெரிய சூரனாகக் கணிக்கப்பட்டார். சரி எப்படிப் பிடிப்பது?
இருக்கவே இருக்கின்றது மாடுகளின் வால்கள். மாட்டின் பின் பக்கம் பதுங்கி நின்றி, அல்லது நாலுகால்ப் பாய்ச்சலில் வாலைக் கிளப்பிக் கொண்டு ஓடும் மாட்டைத் துரத்தியாவது, அதன் வாலில் கொத்தாக இருக்கும் முடியில் கொஞ்சத்தைப் பிடுங்கிக் கொண்டு விடுவோம். நான்கு ,ஐந்து அல்லது ஆறு முடிகளை ஒன்றாகச் சுருட்டி நல்ல பலமுள்ளதாக மாற்றுவோம். பின்பு அதில் ஓரு சுருக்குத் தளம் செய்து ஈக்கிலில் வரிந்து கட்டுவோம். (தென்னோலையில் இருந்து வாரிப் பிரித்தெடுப்பதுதான் ஈக்கில்.) இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கட்டினால், வீட்டு முற்றம் கூட்ட அப்பொழுது உபயோகத்திலிருந்த விளக்குமாறை உருவாக்கி விடலாம். ஈக்கிலும், விளக்குமாறும், இராசான் தும்பியும் யாருக்கு ஞாபகம் இருக்கின்றது?
மெல்ல மெல்லப் பதுங்கிச் சென்று ஈக்கிலில் வரிந்து கட்டியுள்ள சுருக்குத் தளத்தைக் கொண்டு இந்த இராசான் தும்பியைப் பிடித்து விட்டால் நாம் இராசாதான்.
அந்த நாட்களில் கையில் புழங்கிய பெரிய ஆயுதம் கெற்றப்போல். இது Caterpult -கற்றப்போல்ற் என்ற ஆங்கில உச்சரிப்பைக் கொண்டிருந்தாலும், எங்களுக்கு சிறுவயதில் சொல்லத் தெரிந்த பெயர் கெற்றப்போல்தான் நல்ல தடி இரண்டைஎடுத்து, பக்கவாட்டாகச் சீவி, அடியில் றபரைச் சுற்றி V வடிவில் வரிந்து கட்டுவோம். சைக்கிள் கடைகளுக்கு சுற்றித் திரிந்து, கழிக்கப்பட்ட சைக்கிள் ரியூப்பிலிருந்து கத்தரிக்கோல் கொண்டு றிபன் போல கத்தரித்து, இணைக்கப்பட்ட தடியைச் சுற்றி வரிந்து கட்டுவோம். (கையில் பலமாகப் பிடிக்கவும் இதமாக இருக்கவும் இந்த ஏற்பாடு. ஒரு நீள் சதுரத் தோலின் இருபக்கமும் ஓட்டை துளைத்து , ஒவ்வொரு பக்கமும் றபரைக் கட்டி, பின்பு இரண்டினதும் முனைகளை, சேர்த்துச் கட்டிய V வடிவலான தடியின் இரு முனைகளிலும் கட்டுவோம். இரு பக்கங்களிலும் சமமான நீளம் இருக்க வேண்டியது மிக முக்கியம். அப்படி இல்லாவிட்டால், குறி பார்த்து சரியாக இலக்கை அடிக்க முடியாது.
எதைக் கொண்டு தாக்குவது? ஆரம்பத்தில் நல்ல சிறிய உருண்டைக் கற்களுக்காக அலைந்து திரிந்தாலும், பிற்பகுதியில் நமது தமிழில் போளை என்று வர்ணிக்கப்பட்ட மாபிள்கள் எமக்குக் கைகொடுத்தன. நீள்சதுரத் தோலுக்குள் வைத்த மாபிளை இடக் கையில் பற்றிப் பிடித்துக் கொண்டு, வலக்கையால் வி போன்ற மற்றப் பகுதியை பிடித்தபடி, குறி பார்த்து அடிப்போம். குறி தவறாமல் எதையும் வீழ்த்தும் கெற்றப்போல் வீரனாக அப்பொழுது அடியேன் திகழ்ந்தேன் என்பதை இங்கே பெருமையுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். இந்க் கெற்றப்போல் ஞாபகம் உங்களில் எத்தனை பேருக்கு இருக்கின்றது?
சிறுவயதில் (ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கின்றேன்.) ஆண்டு 1963ஆக இருக்கலாம்) . படித்த பாடசாலையின் பெயர் காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி. காலை 10.00 மணிக்கு ஒரு சிறிய இடைவேளை விடுவார்கள். இந்தச் சமயம் எல்லோருக்கும் ஒரு பணிஸ் (Bun) கிடைக்கும். இந்த நேரம் பார்த்து அழையா விருந்தாளிகளாக காகங்கள் பல வந்துவிடும். ஒரு சிறிய துண்டைப் பிய்த்து, அதற்குள் தயாராக வைத்திருக்கும் ஒரு சிறு கண்ணாடித் துண்டை உள்ளே வைத்து காகங்களை நோக்கி வீசுவோம். ஏதோ ஒரு காகம் லபக்கென தன் அலகால் அதைக் கொத்து விழுங்கி விடும். விழுங்கி விட்டாயா நீ தொலைந்தாய் போ என்று ஆர்ப்பாட்டமாகக் கத்துவோம். இது ஞாபகத்திற்கு வரும்போது இவ்வளவிற்கு கொலைகாரப் பாவிகளாக இருந்தோமா என்றே நினைக்கத் தோன்றுகின்றது. உங்களில் யாருக்கு இந்த அனுபவம் இருக்கின்றது? ஞாபகம் வருகின்றதா?
பனங்கிழங்கும், ஒடியலும், பனம்பழமும் பினாட்டும், வடலியும் பனைஓலையும் உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் வருகின்றது?
பழுத்து விழுந்த பனம் பழத்தினைப் பிரித்தெடுத்து, பனம் பழத்தின் சாறை அகப்பையால் வழித்தெடுத்து, பின்பு மா, சீனி சேர்த்து , உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்த, பனம்பழப் பணியாரத்தை எப்பொழுது கடைசியாகச் சுவைக்கும் அனுபவம் கிடைத்தது?
பனங்கொட்டைகளை வீட்டுக்குப் பின்பக்கமாக உள்ள ஓர் இடத்தில் ஒன்றன்மேல் ஒன்றாகக் குவித்து பின்பு அதற்கு மேல் மண்ணை வாரிக் கொட்டி அது மழையில் நனைந்து, வெயிலில் காயவிட்டால், சில மாதங்களில் கொட்டைகள் முளைவிட்டு, பனங்கிழங்காக நீண்டு வளர்ந்து விடும். இந்தக் கிழங்கை கொதிநீரில் அவித்து, தோலை உரித்தால் அவித்த பனங்கிழங்கு கையில் வந்துவிடும். அதன் தோலைவாரி கிழங்கைச் சுவைத்து உண்ட ஞாபகம் வருகின்றதா? இன்று எத்தனை நவீன உணவுகளைச் சுவை பார்த்து வருகிறோம். இந்தப் பனங்கிழங்கின் சுவையே தனிச்சுவைதான். ஞாபகம் இருக்கின்றதா?
இதே பனம்பழச் சாறை பரவலாக வைத்து, வெயிலில் காயவிட்டால் அது பனாட்டு.
இந்தக் கிழங்கை இரண்டாகப் பிளந்து, பீலியை அகற்றி, அடியிலும் நுனியிலும் அழகாகக் கத்தரித்து, தலைப் பகுதியில் துளையிட்டு நூலில் கோர்த்து, யாழ்ப்பாணத்து மண்ணிற்கே உரிய கோடை வெயிலில் காயவிட்டால், ஒடியல் தயார். நெஞ்சில் உரம் வேண்டும் முன்நின்று போராட என்பார்கள். ஆனால் பல்லில் உரம் வேண்டும் ஒடியலோடு போராடிச் சுவைக்க! ஞாபகம் வருகின்றதா?
பனை மரத்தின் இளமை ஆரம்பம் வடலி என்ற பெயரோடுதான் தொடங்குகின்றது. இந்த வடலி என்பது உங்கள் ஞாபகத்திற்கு வருகின்றதா? இந்த வடலி வளர்ந்து நெடும் பனையாகி அதில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் நுங்குக் குலைகளை வெட்டி வீழ்த்தி, நுங்கின் தலையைக் கூரான கத்தி கொண்டு சீவி, உள்ளே இருக்கும் பதமான, மென்மையான சதையை எடுத்து வாயில் சுவைத்த ஞாபகம் வருகின்றதா?
பனங்கள் அருந்தியிருக்கின்றீர்களா? என்னடா இவன் குடிகாரப் பயலாக இருப்பான் என்று சொல்ல வருகின்றீர்களா? எல்லாமே ஒரு ஜாலிக்காகச் செய்தவைதானே ஒழிய, எந்தப் பழக்கங்களுக்குமே இதுவரையில் அடிமையாகாத பெருமை இன்றுவரைக்கும் அடியேனிடம் இருக்கின்றது.
மாமா வீட்டிற்குப் பின்பக்கம் ஓர் ஒற்றைப் பனை இருக்கின்றது. இதில் கள் இறக்க ஒருவர் தினமும் காலையில் வந்து போவார். இதில் தொங்கும் முட்டியில் மெல்ல மெல்ல கள் ஒழுகி, காலையில் பாதி முட்டியளவாவது நிரம்பி விடும். இந்த முட்டியில் எனக்கும் என் மச்சானுக்கும் ஒரு கண். உயரப் பனையில் தொங்கும் முட்டியிலுள்ள கள்ளைச் சுவை பார்க்கும் திருட்டு ஆசை இருவருக்கும் இருந்தது.
திட்டமிட்டபடி ஒருநாள், அந்தப் பனையடிக்கு இருவரும் வந்தோம். யாராவது வந்தால் எச்சரிக்கைக் குரல் கொடுக்க வேண்டியது மச்சானின் பணி. பனையில் தொங்கும் முட்டியைக் குறிபார்த்து அடித்து ஒரு துவாரம் ஏற்படுத்த வேண்டியது என் பணி. கெட்டப்போல் சூரனல்லவா அடியேன். முதல் ஷொட்டில் முட்டியில் ஓட்டை! கள் ஒழுகுதடா என்று கத்தினேன். காவலுக்கு நின்ற மச்சான் ஓடிவந்தான். முட்டியிலிருந்து துளித்துளியாய் கள் ஒழுகிக் கொண்டிருக்க, மாறி மாறி இருவரும் தலையை நிமிர்த்தி, ஒழுகிய கள்ளைச் சுவைக்கத் தொடங்கினோம். திடீரென மச்சான் ஐயோ என்று அலற, நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கே நின்றது மாமா. அடி விழுந்ததால்தான் அலறியிருக்கின்றான் மச்சான்! மேலும் அங்கே நிற்க எனக்கென்ன பைத்தியமா? குதிகால் பின்பக்கம் பட, வேகமாக ஓடி மறைந்தேன்.
முறைப்பாடு வீட்டுக்குப் போக அப்பாவிடம் பிரம்படி வாங்கியது இன்னொரு தனிக்கதை.
ஞாபகம் இருக்கின்றதா இப்படியான உங்கள் திருவிளையாடல்கள்?
– ராஜேஸ்மணாளன் (சுவிஸ்)
















