வந்தவர் உற்சாகமாக மருத்துவரிடம் பேசினார்.
எனக்குள்ள இன்றைய உற்சாக உணர்வு என்றுமே இருந்ததில்லை டாக்டர். என்னுடைய 18 வயது மனைவி ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகின்றாள். இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் டாக்டா?
என்று அளவற்ற குதூகலத்தோடு மருத்துவரிடம் கூறிப் பெருமைப்பட்டார் அந்தத் 90 வயது முதியவர்.
மருத்துவர் உடனடியாக அதற்குப் பதிலளிக்கவில்லை. சற்று நேரம் பேசாமல் இருந்தவர் மெல்லச் செருமிக் கொண்டு தன் பேச்சை ஆரம்பித்தார்.
உங்களைப் போல எனக்கொரு வயதாளியான நண்பர் இருக்கின்றார். அவருக்கு வேட்டையாடுவதென்றால் கொள்ளைப் பிரியமுண்டு. தவறாது காலத்திற்குக் காலம் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு உற்சாகமாக வேட்டைக்குப் புறப்பட்டு விடுவார்.
இப்படித்தான் ஒரு நாள் இவர் வெளியில் புறப்பட்டபோது கையில் துப்பாக்கி இருக்கவில்லை. கடும் வெயில் காலம் என்பதால் ஒரு குடைதான் அவர் கையில் இருந்தது. ஒரு சிறு ஆற்றோரம் வந்தபோது ஒரு கொழுத்த முயல் நிற்பதை நண்பர் கண்டார்.
பழக்கதோஷம் விடுமா? கையிலிருந்த குடையைத் துப்பாக்கியாக நினைத்துக் கொண்டு அதைக் கையிலெடுத்து மிருகததிற்குக் குறிபார்க்க டுமீல் டுமீல் என்ற சப்தமும் கேட்க முயல் சூடுபட்டு அந்த இடத்திலேயே துடிதுடித்து விழுந்து இறந்தது.
என்று தன் கதையைச் சொல்லி முடித்து விட்டு, சிரிப்போடு மருத்துவர்… இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்று தன்னருகே நின்ற பெரியவரிடம் கேட்டார் மருத்துவர்.
அந்தத் தொண்ணூறு வயதுப் பெரியவர் சட்டெனப் பதிலளித்தார்.
இதிலென்ன யோசிக்க வேண்டியிருக்கின்றது டாக்டர்? வேறு யாரோ முயலை அது நேரத்தில் சுட்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான்.
மருத்துவர் பெரியவரை நிமிர்ந்து பார்த்தார். புன்னகைத்தார்…
உங்கள் 18 வயது மனைவி தாயாகி இருப்பதாகப் பெருமையோடு சற்று முன்பு கூறினேர்களே. இங்கேயும் அதே முயல் சுட்ட கதைதான் என்றார் மருத்துவர்!
-ராஜேஸ்மணாளன், சுவிஸ்
















