சாதிகளும் மதங்களும் உருவானவை அல்ல, உருவாக்கப்பட்டவை. இதற்கான அடையாளங்கள் அனைத்தும் இயற்கையாக இல்லை, மாறாக செயற்கையாகவே இருக்கின்றன.
இனத்தை எடுத்துக்கொண்டால் அதன் அடையாளங்கள் நிறத்தை வைத்தும், உயரத்தின் அளவை வைத்தும், மொழியை வைத்தும் அடையாளம் காண முடியும். இவை இயற்கையாகவே இருப்பதைக் காணமுடிகிறது.
இது போன்று சாதி மதங்களை இனம்காண முடியவில்லை. முஸ்லீம்களை தாடியை வைத்தும், கிறிஸ்தவர்களை சிலுவைமாலை அணிவதை வைத்தும், இந்துக்களை நெற்றியில் திருநீறுஅணிவதையும்,வேட்டிசால்வைஅணிவதை வைத்தும், சீக்கியர்களை தலைப்பாகைஅணிவதை வைத்துமே அடையாளம் காணமுடிகிறது. இவை அனைத்தும் செயற்கையாகவே உள்ளன.
இது போன்று சாதிகளை அடையாளம் காணும்போது பிராமணர்களைப் பூணுலையும், தலைக்குடுமியை வைத்து அடையாளம் காணுகிறோம். ஏணைய சாதியினரை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகவே உள்ளது.
மனித இனம் அடிப்படையில் எந்தவித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை.
மனித இரத்தம் உலகெங்கும் சிவப்பாகவே உள்ளது. அவயங்களில் கூட எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை. கண், காது, வாய், மூக்கு, கை,கால்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே உள்ளன.
இதிலிருந்து சாதி மதங்கள் உருவாக்கப்பட்டவை என்பதை உணரமுடிகிறது.
சாதி உருவாக்கப்பட்ட முறையை முதலில் பார்ப்போம்.
நிலப்பிரபுக்கள் எனப்படுவோர்கள் புத்திக்கூர்மையாலும், அடக்குமுறையாலும் அப்பாவி மக்களை எல்லாம் தந்திரமாக ஏமாற்றி நிலங்கள் அனைத்தையும் தமதாக்கிக் கொண்டார்கள். அதே நிலத்திலையே அவ்மக்களை உழைக்கச் செய்து சிறுதொகைப் பண்டங்களை கூலிகளாகக் கொடுத்து விட்டு பெரும் தொகைப்பண்டங்களை விற்று பெரும்செல்வங்களை தங்களோடு வைத்துக்கொண்டார்கள். இவர்கள் அரசர்கள் போல் மிகவும் ஆடம்பரமாகவே வாழ்ந்தார்கள்.
சனத்தொகையில் மிகவும் சிறுதொகையாக இருந்த இவ் நிலப்பிரபுக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வசதியான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார்கள். அந்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் இந்த சாதி அமைப்பு ஆகும்.
சனத்தொகையில் பெருந்தொகையான இம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், சிறுதொகையான தமக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்பட்டுவிடும் எனப் பயந்த இப் பிரபுக்கள் இம் மக்களை தொழில் ரீதியாகப் பிரித்து சாதிகளை உருவாக்கிவிட்டார்கள். இதுதான் கடவுளின் விருப்பம் எனவும் மக்களுக்கு கூறினார்கள். இதை அப்படியே நம்பிய அம் மக்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி அக் கட்டளைகளை ஏற்று அடிமைக் கூலிகளாக வாழ்ந்தார்கள்.
கல்வியோ, புத்திக்கூர்மையோ அன்று இவர்களிடம் இருக்கவில்லை. இதுதான் நிலப்பிரபுக்களுக்கு இதைச் செய்ய மிகவும் இலகுவாக இருந்தது. இம் மக்கள் உண்மையில் வாழவில்லை அடிமையாகவே இருந்தார்கள். உயர்சாதியினர் நடந்து சென்ற பாதையில் கூட இவர்கள் நடந்து செல்ல முடியாது. பாதணிகள் அணியமுடியாது. பெண்கள் கூட மேல் சட்டை அணியமுடியாது. பாடசாலைகளில் கூட சமனாக கல்வி கற்க முடியாது. இப்படி வாயால் சொல்ல முடியாத அளவுக்கு பல கொடுமைகளை அனுபவித்தார்கள். நேரக்கணக்கின்றி இவர்களுக்காக இரவுபகலாக உழைத்தார்கள்
அன்று எப்படி இவர்களின் வாழ்க்கை சீரழிந்ததோ இன்றும் அது ஆலமரமாக வளர்ந்து மக்களின் ஒற்றுமையையும், வாழ்க்கையையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. இச் சாதி அமைப்பு இவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வைக்கொடுப்பதற்குப் பதிலாக அவலமான வாழ்வையும், அவமானத்தையுமே பரிசாகக் கொடுத்தது.
மதங்களும் இப்படியான நோக்கோடுதான் தோற்றுவிக்கப்பட்டன. கடலால் பிரிக்கப்பட்ட பல நாடுகள் தங்களின் வசதிக்கேற்ப பல மதங்களை உருவாக்கி னார்கள். எல்லா மதங்களும் அன்பையே அடிப்படைக் கொள்கையாக கொண்டிருந்தன. ஆயினும் இவர்கள் மதத்தின் பெயரால் பெரும் யுத்தங்களை நடாத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி எடுத்தார்கள்.
இப்பொதும் பல நாடுகளில் மதக்கலவரங்கள் நடப்பதை நாம் காணமுடியும். ஏன் இந்த முரண்பாடான கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள்? கேள்விகளை எவரும் கேட்கவில்லையா? அல்லது அவர்கள் மறைக்கப்பட்டார்களா? மறைக்கப்பட்டு அடக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. எப்படியோ ஒன்றாய் இருந்த மக்களைப் இவர்கள் பிரித்து விட்டார்கள்.
மதத்தை விட சாதி அமைப்புத்தான் பல மோசமான விளைவுகளை ஏற்ப டுத்தியது. மனித நாகரிகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்தது. மனிதக் கழிவுகளை மனிதனே தனது கையால் அள்ளுகின்ற அவலம் சாதிக் கொடுமையின் உச்சமாகும். முன்னைய நாட்களைப் போல் சாதியைக் காரணம் காட்டி ஒரு பகுதி மக்களை ஆலயங்களுக்குள் செல்ல விடாமை, தேனீர்க் கடைகளில் சமனாக நடத்தாமை, இறுதிக் கடமைகளைக் கூட மயானத்தில் செய்யவிடாமை, இப்படி மனித நாகரிகத்துக்கே சவால் விடும் செயல்பாடுகளைத்தான் இப்போதும் காணமுடிகிறது.
இதைவிட சாதிச் சண்டைகள் சராசரி எங்கையாவது ஒரு இடத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது மனித அழிவைக் கூட ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
“காதல் என்பது உணர்வோடு சம்பந்தப்பட்ட ஒரு உண்மையான நிகழ்வு’’ “இது சாதி, மதம், இனம் பார்த்து வருவதில்லை’’ எமது முன்னைய வரலாற்றுக் காலமான சங்கத் தமிழனின் காலத்தில் கூட இது போற்றி வளர்க்கப்பட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் வளர்க்கப்படுகிற இக் காதல் இங்கு அழிக்கப்படுகிறது. உண்மையான உணர்வுகளையும், பாசங்களையும் இன்று குழி தோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் மனிதவாழ்வுக்கு எதிரான நிகழ்வுகளேயாகும்.
இன்று இது மேலும் வளர்ந்து வாழ்வைத் தீர்மானிக்கிற அரசியலிலும், சாதி ரீதியாகப் பிரிந்து நின்று முழு வாழ்க்கையையும் அகல பாதாளத்திற்கு தள்ளி யுள்ளார்கள்.
முன்னைய நிலப்பிரபுக்கள் இன்றைய நவீன விஞ்ஞான உலகில் வளர்ச்சி யடைந்து பெரும் முதலாளிகளாக மாறிவிட்டார்கள். இவர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அதே பிரிவினைகளை நவீன முறையில் நடைமுறைப் படுதிக்கொண்டிருக்கிரார்கள். இதற்கு இன்றைய நவீன ஜனநாயகத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். “ஜனநாயகம் என்பது உலக மக்களுக்காகிய உயர்ந்த அரசியல் வடிவமாகும் ’’ “ஜனநாயகம் உண்மையானதும் புனிதமானதுமாகும் ’’ இவர்கள் தங்களின் நலன்களுக்காக சாதி,மதக்கட்சிகளை ஊக்கிவிப்பதொடு, புதிய புதிய கட்சிகளையும் உருவாக்கி மக்களைப் பிரித்துவிட்டார்கள்.
மக்கள் பிரிந்திருப்பதும் சண்டையிட்டுக்கொள்வதும் இவர்களின் வளர்ச்சிக்குத் தேவையாகவே இருந்தது. மொத்தத்தில் மக்கள் ஒற்றுமையின்றி வாழ்வதற்கு இவர்கள் மிகவும் உதவியாகவே இருந்தார்கள்.
இதற்கு பலியாடுகளானது வறிய உழைப்பாள மக்களும், நடுத்தரமக்களுமேயாகும்.
இவற்றில் இருந்து இம் மக்கள் விடுபட வழி என்ன?
முதலில் சாதிக்கட்சிகளையும் அம்மக்களையும் பார்ப்போம்:
ஒரு அரசியல் கட்சி என்பது சாதிமதங்களைக் கடந்து, அனைத்து மக்களுக்கும் சம பங்கு அளிக்கக்கூடிய கட்சியே உண்மையான அரசியல் கட்சியாகும்.
அரசியலில், அரசநிர்வாகங்களில், அரசதொழில்வாய்ப்புகளில் இது போன்று அனைத்திலும் குறைந்த சாதி எனப்படுவோரை ஒதுக்கி, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க மறுத்ததால் அம் மக்களின் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகியது. பாதிக்கப்பட்ட மக்கள் வேறு வழியின்றி சாதிக்கட்சிகளை உருவாக்கிறார்கள். இதன் மூலம் ஓரளவு நன்மைகளைப் பெறமுடியுமே ஒழிய, முழு உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியாது.
“சாதிக் கொடுமையின் குழந்தையே சாதிக்கட்சியாகும்’’
பல்லினம் வாழும் சமூகத்தில் சாதிக்கொரு அரசாங்கமும், மதத்துக்கொரு அரசாங்கமும் அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் ஒரு அரசியல் கட்சி,அல்லது சில கூட்டு அரசியல் கட்சிகளின் தலைமையிலேயே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. அவ் அரசு தான் மக்களின்வாழ்வைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். ஏனையவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை என்பதே உண்மையாகும்.
ஆகவே இப் பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பார்ப்போம்:
“இது இடியப்பச் சிக்கல்’’ என்ற ஒரு பழமொழி உண்டு. இதன் முடிச்சுக்களை அவிழ்ப்பது மிகவும் கடினம். அது போன்ற ஒரு முடிச்சுத்தான் சாதியாகும். அவிழ்க்க முடியாத முடிச்சாகவே பிரபுத்துவ சமுதாயம் இதை உருவாக்கியது. இதை மிகவும் கவனமாகவே அவிழ்க்க வேண்டும். இது செய்யப்பட முடியும், செய்யப்படவும் வேண்டும்.
இதைச் செய்யவில்லையாயின் உலகின் முன் அவமானங்களின் சின்னங்களாகவே நாம் அடையாளப்படுத்தப்படுவோம். உலகத் தராசுகளில் சாதியைக் கொண்டுபோய் எவரும் அளவு பார்க்க முடியாது.
இதை எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்:
1) ஒரு மனிதனைச் சாதி என்று பார்க்காமல் மனிதன் என்று பார்ப்போம்.
2) சாதி முரண்பாடுகளை பகை முரண்பாடாகப் பார்க்காது சிநேகித முரண்பாடாகப் பார்ப்போம்
3) ஒற்றுமைக்கு எதிரான சாதிமுறையினை அரசியலில் இல்லாது ஒழிப்போம்.
4) அரசியலில் அனைத்து சாதி மதத்தினருக்கும் சமமான பங்கினை அளிப்போம்.
5) தவிர்க்க முடியாத நிலையில் உருவாகும் சாதி மதக்கட்சிகளில் மக்கள் அனைவருக்குமான அரசியலை கொள்கையாகக் கொள்வோம். பாதிக்கப்படும் மக்கள் யாராயினும் குரல் கொடுப்பதோடு, அவர்களுக்காக நேர்மையான வேலைத்திட்டங்களை வகுத்து செயல்படுவோம்.
“சாதியை ஒழிப்போம், சரித்திரத்தை மாற்றுவோம்’’
“உலகப்பந்தில் புதியதோர் அத்தியாயத்தைப் படைப்போம்’’
-மாறன்
















