மக்களின் உணர்வு பூர்வமான உணர்ச்சிகளை இராணுவத்தின் மூலமாகவோ, பலாத்காரமாகவோ, வன்முறை மூலமாகவோ தடுத்து நிறுத்த நினைத்தால் அதன் தாக்கம் வருங்காலத்தில் மிகப் பெரிய விளைவைக் கொடுக்கும் என்பதை அரசு மனதில் வைத்திருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் பிரத்தியேக அலுவலகத்தில் நேற்று மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக வடக்குமாகாண சபையினால் நேற்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத் தில் நடத்தப்படவிருந்த மரம் நாட்டும் விழா தவிர்க்கமுடியாத காரணத்தினால் கைவிடப் பட்டதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
“வடக்குமாகாணத்தில் 26ஆம், 27ஆம் திகதிகளில் எந்த நிகழ்வுகளிலும் பொலிஸார் பங்குபற்றக்கூடாது என ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ள தாகவும் அதனால் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்றும் அப்படி ஈடுபட்டால் தண்டனைக்கு உள்ளாவோம் என்றும் பொலிஸார் எனக்கு தெரியப்படுத்தியிருந்தனர். என்னால் அவர்கள் தண்டிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த மரநடுகைத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.” என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதனால் அந்த நிகழ்வு நேற்று இடம்பெறவில்லை.
ஆயினும் அதற்கு மாறாக நேற்று மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவின் அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வில் முதலமைச்சரும் கலந்துகொண்டார்.
அங்கு உரையாற்றிய முதலமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
எங்களுடைய காணிகளில் – தனிப்பட்ட காணிகளில் மரங்களை நாங்கள் நடுவதை எந்த அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது.
எங்களுடைய வாழ்க்கையில் இளைஞர் சமுதாயம் ஒரு மேம்பாடு பெற வேண்டும் என்பதற்காகவே இந்த மரங்களை நாம் நடுகிறோம். அத் துடன் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை எடுத்துக் காட்டவும் இந்த மரங்களை நடுகிறோம்.
வடமாகாணத்தின் ஏ-9 வீதியில் இரண்டு பக்கங்களும் இருந்த மரங்கள் இன்று காணாமல் போய் விட்டன. காடுகளாக இருந்த இடங்கள் வெறுந் தரைகளாக போய் விட்டன. அது எப்படிப் போனது? எங்கே போனது? யார் கொண்டு போனார்கள்? என்பதற்கு தனியான விசாரணை மேற் கொண்டால் தான் தெரியவரும்.
எனவே இனிப் புதிய மரங்கள் தேவை யாகவுள்ளன. அழிந்த மரங்களைத் திருப்பி வரவழைக்க வேண்டும். வருங்காலத்தில் நல்ல எண்ணத்தோடு இளைஞர் சமுதாயம் மேம்பட வேண்டும்.
இறந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என நினைத்துக் கொண்டு அதே நேரத்தில் ஒரு புதிய உலகுக்கு அடையாளமாகவும் இந்த மரங்களை நடுகின்றோம். ஆனால் அரசு இதனை நிறுத்தியுள்ளது. அரசு இதனைக் குறுகிய பார்வையில் பார்ப்பதால் தடுத்துள்ளது.
எங்களுடைய காணிகளில், தனிப்பட்ட காணிகளில் நாங்கள் மரங்களை நடுவதற்கு எந்த அரசும் தடுக்க முடியாது. எங்களுடைய காணியில் எங்களுடைய வீட்டில் மரங்களை நட்டிருக்கிறோம். இது எங்களுடைய உள்ளத்தைப் பொறுத்து உணர்வுகளைப் பொறுத்தது. ஆகவே எங்களுடைய உணர்ச் சிகளைப் பிரதிபலிக் கும் இந்த மாதிரியான விடயங்களை தடுக்க நினைத்தால் அதன் தாக்கம் மிகவும் மோச மானதாக இருக்கும் என்பதை அரசு கணக்கில் எடுக்க வேண்டும்.
ஏனென்றால் மக்களுடைய உணர்வு பூர்வமான சில விடயங்களை நாங்கள் இரா ணுவத்தின் ஊடாகவோ, பலாத்காரத்தின் ஊடாகவோ நிறுத்த முடியாது.
அதனைத் தடுத்து நிறுத்த நினைத்தால் விளைவு பெரிதாகத்தான் கிடைக்கும். பந்தை நீரில் அமிழ்த் தினாலும் அது மேலே தான் வரும். அதனைப் போன்று தான் மக்களது உணர்வுகளும். அடக்கப்பட்டால் அதன் விளைவு பெரிதாகத்தான் இருக்கும் – என்றார்.
















