தமிழ் பேசும் மக்களுக்கு தனியான மாநிலம் என்ற எனது கருத்தை தனி நாடு என்று இலங்கை பாதுகாப்புப் பிரிவு அர்த்தப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ள கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், விசா விதிமுறை பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நோர்வேக்கு நாடுகடத்தப்பட்ட ஜெயபாலன் பி.பி.சி. ஊடகத்திடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான வடகாடுக்குச் சென்று தனது தாயாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றுகொண்டிருக்கையில் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
ஆனால், தாயாரின் நினைவிடத்துக்குச் செல்லாமல் திரும்பமாட்டேன் என்று தான் கூறி சாலையில் அமர்ந்து போராடிய பின்னர் தாயின் நினைவிடத்துக்குச் செல்ல அனுமதித்தனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா விசாவில் செல்லும் போது உரை நிகழ்த்தியிருக்கிறேன். அங்கெல்லாம் இதற்கான ஜனநாயக உரிமை இருக்கிறது. ஆனால், இலங்கையில் இது அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்திருக்கவில்லை.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசினேன். தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு மாநிலம் என்று தான் சொன்ன கருத்தை தனி நாடு என்று பாதுகாப்புப் பிரிவினர் புரிந்துகொண்டனர்.
ஆனால், தன்னைப் பற்றி இலங்கை அமைச்சர்களளான பஷீர் ஷேகுதாவூத் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
















