பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்த இடத்திலேயே பாலியல் வன் கொடுமைகளா? அட்டமஸ்கட இல்லம் பற்றி வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் – கே.வாசு

vau-monkவவுனியா மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்டமஸ்கட சிறுவர் இல்ல விகாராதிபதியினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுவன் ஒருவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் அங்கிருந்த சிறுவர்களை பொறுப்பேற்று அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமையும் சிறுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் கடந்த 6ம் திகதி சந்தேகத்தின் பெயரில் விகாராதிபதி கல்யாணதிஸ்ஸ தேரர் கைது செய்யப்பட்டு 14 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இந் நிலையில் அவர் மீதான வழக்கு கடந்த 19 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இவருடைய அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் என்பவற்றை கொண்டு வவுனியா மாவட்ட சட்டத்தரணிகளின் துணையுடன் விகாராதிபதி பிணையில் வெளியில் வர கடும் முயற்சி செய்த போதும் விசாரணைகள் இடம்பெற்று வருவதனாலும் சாட்சிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விகாராதிபதியை விளக்க மறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட அநீதிபதி எஸ். ராமகமலன் தெரிவித்தார்.

இவரிடமும் சிறுவர்களிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சித்திரவதை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின்பேரில் 24 வயதுடைய கோணேஸ்வரன் காங்கேசன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தின் நிர்வாகியாகிய கல்யாண திஸ்ஸ தேரோவின் உதவியாளராக அந்த இல்லத்தில் இவர் பணியாற்றி வந்துள்ளார். வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த சந்தேக நபர் கடந்த 26 அம் திகதி ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, நீதவான் இவரை இரண்டு வாரம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியான பௌத்த மதகுரு வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஓருவன் தன் மீதும் சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடமும், பொலிசாரிடமும் முறையிடப்பட்டிருக்கின்றது.

கடந்த 26 ஆம் திகதி முறைப்பாடு செய்த பாதிக்கப்பட்ட சிறுவன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

நான் குடும்ப நிலை காரணமாக அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் மூன்று வருடங்களாக தங்கி இருந்தேன். நான் விளையாடிக் கொண்டிருந்த போது, குழப்படி செய்ததாக பழைய கறல் கட்டிய ஆணி இருந்த கட்டை ஒன்றினால் எனக்கு அடித்தமையால் காலில் காயம் ஏற்பட்டது. காலுக்கு மருந்து கட்டாமல் பென்ரச் போட்டார்கள். அதன்பின் என் கால், கை எல்லாம் புண் வந்துவிட்டது. இப்பொழுதும் அது மாறவில்லை. எனக்கு தலையிலும் அடித்து பெரிய காயம் எற்பட்டது. தேங்காய் பால் குடிக்க தந்தார்கள். அதன் பின் அது மாறிவிட்டது. என்னைப் போல என்னுடைய அண்ணாவுக்கும் அடிப்பார்கள். அவருக்கும் காயங்கள் இருக்கு. எங்கள் இல்லத்தில் இருக்கும் இரண்டு பேர் என்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவார்கள். இதே மாதிரி மற்றவர்களும் செய்யுறவர்கள் எனத் தெரிவித்தான்.

அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யக் கூடாது எனவும் குறித்த பாதிக்கப்பட்ட சிறவனின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் முறைப்பாடு தொடர்பாக சிறுவன் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.றுவான் தெரிவிக்கையில், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் குறித்த சிறுவன் உறவினருடன் வந்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் தற்போது வவுனியா பொலிசில் முறைப்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க இச் சிறுவர் இல்லத்தில் துஸ்பிரயோகம் இடம்பெற்றதான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அங்கிருந்த பல சிறுவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். அவ்வாறு வெளியேறியிருந்த சிறுவனின் ஒருவனே தற்போது முறைப்பாடு செய்துள்ளான். இன்னும் பல சிறுவர்கள் வெளியில் இருப்பதால் அவர்களையும் கண்டு பிடித்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த சிறுவர் இல்லத்தில் இருந்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த 21 சிறுவர்களில் 19 பேர் வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரிடம் நீதிமன்றத்தினால் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் முல்லைத்தீவில் உள்ள அரச அனுமதி பெற்ற சிறுவர் இல்லம் ஒன்றில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சிறுவர்களில் 8 பேர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவர்களுடைய பெற்றோரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சிறுவர்கள் பாடசாலை சென்று கல்வி கற்பதற்கு வசதியாக சைக்கிள்கள் மற்றும் புத்தகங்கள், உபகரணங்கள் என்பனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டிருக்கின்றது.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.மனோகரராஜா கூறுகையில், எமது சட்டவிதிகளை மீறி அட்டமஸ்கட சிறுவர் பராமரிப்பு நிலையம் செயற்பட்டது. அங்கு பல உரிமை மீறல்கள் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களும் இனி தொடர்ச்சியாக கவனிக்கப்பட்டு தேவையற்ற இல்லங்களும் முறைகேடாக இயங்கும் இல்லங்களும் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அட்டமஸ்கடவில் இருந்த 8 சிறுவர்கள தற்போது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஏனைய சிறுவர்களும் நீதிமன்றம் உத்தரவுக்கமைய ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த கருணை போதிக்கும் ஒருவரது இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் உரிமை மீறல்களுக்கு நீதியான விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவதன் மூலமே இனிவரும் காலங்களில் ஆவது இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்தலாம் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Tags: ,

Leave a Reply