இலங்கையில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் தராசின் தட்டில் சமநிலையில் போடும் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறை தவறானது என்று நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாளில் ஆற்றிய உரையிலேயே மேற்கண்ட கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு குறித்த நீதி கோரும் விடயத்தில் இலங்கை அரசு மேற்கொண்டதும் தொடர்ந்து மேற்கொள்வதும் மனித உரிமை மீறல்களோ அல்லது போர்க்குற்றங்களோ மட்டுமன்றி தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பே என்பதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதல் முக்கியமானது ஆகும்.
இவ்விடயத்தில் போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் ஒரே தட்டில் போடும் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறை தவறானது. இலங்கை அரசு திட்டமிட்ட முறையில் இன அழிப்பை ஒரு செயற்திட்டமாக வகுத்து நடைமுறைப்படுத்தியது. இப்போதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.
இத்தகையதொரு இன அழிப்பை ஏனைய அரசுகள் ஒரு முரண்பாட்டுத் தீர்வு அணுகுமுறையாக தமது நாடுகளில் எதிர்காலத்தில் பயன்படுத்தாது தடுக்க வேண்டியதொரு கடமையும் அனைத்துலக சமூகத்துக்கு உண்டு.
இதனால் இலங்கை மீதான இன அழிப்பு குறித்த அனைத்துலக விசாரணையும் அதற்குரிய தண்டனையும் நீதி கோரும் விடயத்தில் முக்கியமானவை – என்றார்.
















