உண்மையான புலிகள் யார் என்பதை அனைவரும் அறிவார்கள்; மங்கள சமரவீர

Mangala-Samaraweeraமோசடியான முறையில் பெறும் பணத்தை சலவை செய்யும் முக்கியமான மையமாக இலங்கை மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தவறான வழியில் பெறப்பட்ட பணம் மற்றும் விடுதலைப் புலிகளின் பணம் என்பன வெளிப்படையாகவே மோசடி செய்யப்பட்டு வருகிறது.

இலங்கை மிகப் பெரிய பண மோசடி மையமாக மாறியுள்ளது. முழு பொருளாதாரத்திலும் தவறான வழியில் பெறப்பட்ட பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பெருந்தொகையான பணம் மற்றும் தங்கம் என்பன நாட்டில் மோசடி செய்யப்பட்டுள்ளன.எங்கள் மீது விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. ஆனால் யார் உண்மையான புலிகள் என்பதை அனைவரும் அறிவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பணம் மற்றும் தங்கம் என்பன பட்டப்பகலில் மோசடி செய்யப்பட்டது. விடுதலைப்புலிகளின் உறுப்பினரான கருணா தாமரை தடாகத்தில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டார்.

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் தன்னை அறிவித்து கொண்ட கே.பி ஹிக்கடுவயில் நடைபெற்ற பொதுநலவாய மக்கள் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அத்துடன் பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வேளையில் அரசாங்கத்தின் அணுசரனையில் விடுதலைப் புலிகளின் தயா மாஸ்டர் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

யார் விடுதலைப் புலிகளை தமக்கு அருகில் வைத்துள்ளனர் என்பதை முழு உலகமும் அறிந்து கொள்ள வேண்டும்.புலிகளின் பணம், அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பெறப்பட்ட தரகு பணம் என்பன மோசடி செய்யப்பட்டுள்ளன.

நாடு வளர்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் அரச நிறுவனங்களின் நிலைமைகள் உண்மையான வளர்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply