மாவீரர் தினமும் மர்ம மனிதர்களும் – செல்வரட்னம் சிறிதரன்

Maveerar-malarமகிழ்ச்சி மனிதனை வாழவைக்கும். பயம் மனிதனை சீர்குலைக்கும். பயத்தை ஏற்படுத்துகின்ற பயங்கரவாதம் மனித குலத்தையே இல்லாமல் அழித்துவிடும். இதனால்தான் இலங்கை அரசாங்கம் நாட்டில் பயங்கரவாதம் வேண்டாம் என்று சொல்கின்றது. அவ்வாறு சொல்வது மட்டுமல்லாமல் பயங்கரவாதம் நாட்டில் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் அது மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்கின்றது.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. முப்பது வருடகாலம் நாட்டில் பயங்கரவாதம் நிலவியது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்தார்கள். பேரழிவுகளுக்கு உள்ளாகினார்கள் என்று அரசாங்கம் கூறுகின்றது. அத்தகைய பயங்கரவாதம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பதையும் அது சுட்டிக்காட்டியிருக்கின்றது.

‘கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர், நாட்டில் பயங்கரவாதம் நிலவியபோது, நாட்டு மக்கள் நிம்மதியை இழந்திருந்தார்கள். வெளியில் செல்பவர்கள், உயிரோடு திரும்பி வீட்டுக்கு வருவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இருக்கவில்லை. எந்த வேளையிலும், எங்கேயும், எப்படியும் குண்டுகள் வெடிக்கலாம். சண்டைகள் மூளலாம். இதன் காரணமாக குண்டுவெடிப்புகளில் சிக்கியும், சண்டை மோதல்களுக்கிடையில் சிக்கியும் மக்கள் உயிரிழக்க வேண்டியிருந்தது.

‘ஆனால் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், நாட்டில் எந்தவொரு இடத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறவில்லை. மக்கள் அச்சமின்றி எங்கேயும், எப்படியும் போய் வரலாம் என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. மக்களின் பாதுகாப்ப உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றது. வெடிச் சத்தங்கள் கிடையாது. குண்டுவெடிப்புக்கள் இல்லை. யாரும் கொல்லப்படுவதில்லை. காயப்படுபவர்களும் கிடையாது. அமைதி நிலவுகின்றது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்கள். பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டர்ரகள். இதனால் நாட்டில் இப்போது அமைதியும் சமாதானமும் நிலவுகின்றது. நாட்டில் இப்போது நிலவுகின்ற இந்த அமைதியையும் சமாதானத்தையும் இல்லாமல் செய்து நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதையோ அல்லது பயங்கரவாதிகள் உருவாகுவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எந்த வகையிலும் அதனைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று அரசாங்கம் உறுதியாகக் கூறியிருக்கின்றது.

தண்டனைக்குரிய குற்றமாகும்

இந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவதற்காக அராசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றுதான் பயங்கரவாதிகள் என அரசாங்கத்தினால் குறிப்பிடப்படுகின்ற விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது. அவர்களை நினைவுகூர்ந்து, அவர்களுடைய பெருமைகளையும், செயற்பாடுகளையும் போற்றுகின்ற வகையில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை எவரும் கொண்டாடக் கூடாது என்ற உத்தரவாகும்..

விடுதலைப்புலிகளை பெருமைப்படுத்துவதோ, அவர்களை ஊக்குவிப்பதோ தடை செய்யப்பட்டிருக்கின்றது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரும் இதனைச் செய்வது சட்டவிரோதமானதாகும். அவ்வாறு செய்பவர்கன் நீதிமன்றச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் எச்சரித்திருந்தது. இதற்கு ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்துவதுகூட, சட்டவிரோதமானதாகும் என்றும் அந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மாவீரர் தினத்தைக் கொண்டாடக் கூடாது என்று பொலிஸ் பேச்சாளரும் அறிவி;த்திருந்தார்.

வடபகுதியிலேயே குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்கு அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாகவே, யாழ் மாவட்டத்தின் இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவும் மாவீரர் தினத்தைக் கொண்டாடக் கூடாது. அவ்வாறு கொண்டாடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், மாவீரர் தினத்தை உள்ளடக்கிய வாரம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டையொட்டி, கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் அரசு ஒரு வாரத்திற்கு மூடியிருந்தது. ஆனால் யாழ் பல்கலைக்கழகம் மாத்திரம் மாவீரர் தினத்தையொட்டி, இரண்டு வாரங்கள் மூடப்பட்டது. இதற்கான முடிவில் அரசுக்கு சம்பந்தமில்லை என்ற வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது எந்த அளவிற்குச் சரியானது, உண்மையாளது என்பது தெரியவில்லை.

ஆனால் இந்த முடிவிற்கு யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிரப்பு தெரிவித்திருந்தது. உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது மக்களுடைய ஜனநாயக உரிமை. அதற்குத் தடைபோட முடியாது என அரசாங்கத்தின் தடையுத்தரவை மறுத்து உரைத்;திருந்தது. இதற்காக அந்தச் சங்கத்தின் தலைவர் இராஜகுமாரன் படையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளை அவர்களுடைய மாவீரர் தினத்தில் கொண்டாடவோ, பெருமைப்படுத்தவோ முடியாது. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் எச்சரிக்கை செய்திருந்த போதிலும், அந்த சட்டத்தின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த ஒரு மோசமான யுத்தத்தில் அரசாங்கத்திற்கும், இராணுவத்தினருக்கும் ஒரு மோசமான எதிரியாக இருந்து விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடியிருந்தார்கள். இந்தப் போராட்டத்தையே அரசாங்கம் பயங்கரவாதச் செயல் என கூறுகின்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய அவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்களையும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களையும் அவ்வாறு ஆயுதமேந்திப் போராடச்செய்ததற்கு என்ன காரணம், யார் காரணம் என்பது இப்போது மறைந்துவிட்டது. மறைக்கப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் போராடுவதற்குத் தள்ளப்பட்டார்கள்

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளையும், அவர்களுக்குரிய பிரதேசத்தை அவர்களே நிர்வாகம் செய்ய அல்லது ஆட்சி செய்வதற்குரிய அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தயாராக இருக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்திருந்த நியாயமான கோரிக்கைகள் உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட அஹிம்சை ரீதியிலான, அமைதி வழியிலான போராட்டங்கள் யாவும் ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கப்பட்டன. இது குறித்து பல்வேறு இழுபறிகள், வாதப் பிரதிவாதங்களின்பின்னர் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அரச தலவர்களினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இந்த நிலையில்தான் தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. தமிழர்களுக்குரிய பிரதேசத்தைத் தனியாக ஆட்சி செய்ய வேண்டும். அதற்காகத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தமிழ் மக்களி;னால் விருப்பத்துடன் அல்லது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையல்ல.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும், ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளும், எழுத்து மூலம் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் மீறப்பட்டதன் விளைவாக, அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்த இனவிரோதமான கொள்கைகள், ஆட்சி முறைகள், செயற்பாடுகள் காரணமாகவே தனிநாடு கோரி போராட வேண்டிய நிலைமைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் போரட்டம் நடத்தியபோது, அந்தப் போராட்டங்கள் அரசியல் போராட்டங்கள் என்ற வகையில் நியாயமான முறையில் அரசியல் ரீதியாக அணுகப்படவில்லை. மாறாக, அதிகார மமதையுடன், போராட்டம் நடத்தியவர்களை அடித்து நொறுக்கி அடக்கி வைப்பதற்காக அரச இயந்திரத்தின் ஆயுதபலம் பிரயோகிக்கப்பட்டது.

அரச இயந்திரத்தின் ஆயுத பலம் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது வன்முறைகளாகப் பயன்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், உரிமை கேட்கின்ற தமிழ் மக்களை, உரிமைக்காகப் போராடுபவர்களைப் பல்வேறு வழிகளில் ஒடுக்க வேண்டும் என்பதற்காகக் கல்வியில் தரப்படுத்தல் இனவிகிதாசாரத்தில் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் கையாளப்படவேண்டும் என்பது போன்ற பல நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், அரசியல் ரீதியாகப் போராடியவர்களை அரசாங்கங்கள் இரும்புக் கரம் கொண்டு பல்வேறு வடிவங்களில் அச்சுறுத்தியும், பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியும் அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக, மேற்கொள்ளப்பட்ட போராட்டமே பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது இதனை முன்னெடுத்திருந்த விடுதலைப்புலிகள் இறுக்கமான ஓர் இராணுவச் செயற்பாட்டின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அரச தரப்பில் பயங்கரவாத அச்சுறுத்தல் நடவடிக்கைள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன என்று வரலாற்றுப் பதிவாளர்களும், ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு பின்னணியில்தான் பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை நினைவு கூரக் கூடாது. அவ்வாறு நினைவுகூர்வது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் எனக் கூறி அரசாங்கத் தரப்பினர் மாவீரர் தினத்தைக் கொண்டாடக் கூடாது என தடை விதித்திருந்தார்கள்.

தடைகளை ஏற்க முடியாது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு

இந்தத் தடையைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்க மறுத்துவிட்டது. அதுந நியாயமற்ற செயல் என அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருந்தது. அரசாங்கத்திற்கு வேண்டுமானால், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால் உயிரிழந்தவர்கள் அனைவரும், அந்தக் குடும்பங்களின் பிள்ளைகள். அந்தப் பெற்றோரின் பாசமிகு மைந்தர்கள். எனவே, இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்று அவர்களைத் தடுக்க முடியாது. அது அவர்களின் உரிமை. மனித உரிமையாகும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பட்டவர்த்தனமாகத் தெரிவித்திருந்தது.

இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், யோகேஸ்னவரன், சிறிதரன் ஆகியோர் நேரடியாகவே நாடாளுமன்றத்தில் உரத்துக் குரல் எழுப்பியிருந்தார்கள். தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டியிருந்ததை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று மறுதலித்திருப்பதுவும், நாடாளுமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்று தனக்கு எவரும் சொல்லத்தேவையில்லை. தனது நாடாளுமன்றப் பேச்சை வெளியில் இருந்து விமர்சிப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை. அதுபற்றி கருத்து தெரிவிப்பதற்கு சபாநாயகருக்கு மாத்திரமே உரிமை இருக்கின்றது. அத்தகைய பேச்சில் எதனை நாடாளுமன்ற பதிவேட்டில் பதிவது எதனை நீக்குவது என்ற உரிமையும் அவருக்கே உள்ளது என்றும், தனக்கு நாடாளுமன்ற சிறப்புரிமை இரக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருப்பதுவும் வேறு விடயங்களாகும்.

மக்களும் ஏற்கவில்லை

உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்ற அறிவிப்பை யுத்தத்தில் சிக்கி பல்வேறு துன்பங்களையும் அனுபவித்துள்ள மக்களும், உயிரிழப்பக்களுக்கு முகம் கொடுத்திருந்தவர்களும் கூட ஏற்கவில்லை. உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது மரபு. அது சமய முறைப்படியும்கூட, அது தங்களுடைய உரிமை. அதனைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற கருத்தை அவர்கள் மௌனமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

மாவீரர் தினத்தைக் கொண்டாடக் கூடாது என்ற தடையுத்தரவுக்கமைய மாவீரர் தினத்தன்று வடபகுதியில் ஆலயங்களில் மணியொலிக்கப்படவில்லை. இதனாலல் மாலை நேரத்து பூஜைகள் நடைபெறவில்லை. சட்டத்தின் மூலம், அன்றைய தினம் மக்களுடைய மத உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கத்தின் அச்சுறுத்தும் எச்சரிக்கையை மீறி சில இடங்களில் ஆலய மணிகள் ஒலித்ததாகவும், தீபங்கள் ஏற்றி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 27 ஆம் திகதி வரையிலான ஒரு வாரகாலம் மாவீரர் வாரம் என்று விடுதலைப்புலிகள் அதனை அனுட்டித்து வந்திருந்ததனால், மாவீரர் தினம் அனுட்டிப்பதைத் தடுப்பதற்காக 21 ஆம் திகதி தொடக்கம் இராணுவத்தினர் எல்லா இடங்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். முக்கிய சந்திகள், மூலை முடுக்குகள், நகரங்கள் கிராமஙகள் என்று எங்கும் இராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் காவல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். மோசமான ஒரு யுத்தச் சூழ்நிலையை மனக்கண்ணில் கொண்டு வரும் அளவிற்கு இராணுவத்தினர் ஆயுதபாணிகளாகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இதனால், என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சவுணர்வும் மக்கள் மத்தியில் வடபகுதியில் ஏற்பட்டிருந்தது.

இருந்த போதிலும் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் தங்கள் வசதிக்கேற்ற வகையில் இறந்தவர்களைப் பலர் நினைவுகூர்ந்தார்கள். பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தீபமேற்றி உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

வீடுகள் தாக்கப்பட்டன

இந்தச் சூழலில்தான் மாவீரர் பற்றி கருத்து வெளியிட்டிருந்தவர்கள் அல்லது தடையை மீறிச் செயற்பட முனைந்தார்கள் என்று அடையாளம் தெரியாதவர்களினால் அடையாளம் காணப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடைய வீடுகள் தாக்கப்பட்டு அவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள்.

கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் வியாகேசு, வல்வெட்டித்துறை நகரசபையின் உபதலைவர் சதீஸ் ஆகியோரின் வீடுகள் முதலில் தாக்கப்பட்டன. அடுத்ததாக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறிரஞ்சனுடைய வீடு உடைக்கப்பட்டு உடைமைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. தனது வீட்டைத் தாக்கியவர்கள், தன்னைக் கொலை செய்வதற்கே முயன்றிருந்தார்கள் என்றும், தான் எச்சரிக்கையடைந்து குடும்பத்துடன் ஓடித் தப்பிவிட்டதாகவும் அவர் கூறியிரு;தார். அதே இரவு கிட்டத்தட்ட அதேநேரம் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தலைவி நாகரஞ்சினி ஐங்கரனுடைய வீடும் தாக்கப்பட்டிருந்தது. தனது வீட்டிற்குக் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியவர்கள், தடைசெய்யப்பட்ட, குண்டு வெடிப்பு சத்தத்தைப் போன்று அதிக சத்தத்தை எழுப்பத்தக்க மூலை வெடிகளை மூன்று மூன்றாகக் கட்டி வீட்டுச் சுவரருகில் வைத்து வெடிக்கச் செய்திருந்ததாக அவர் பொலிசாரிடம் முறையிட்டிருக்கி;ன்றார். அவருடைய வீட்டைச் சோதனையிட்ட பொலிசார் வெடிக்காத நிலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த இத்தகைய மூன்று மூலை வெடிகளையும் கண்டெடுத்துத் தம்முடன் எடுத்துச்சென்றிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

பிரதேச சபை உறுப்பினர்களுடைய வீடுகள் தாக்கப்பட்டதுடன் இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. இறந்தவர்களை நினைவுகூர்ந்து வீட்டுக்கொரு மரம் நடவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் கோரியிருந்ததையேற்று, மர நடுகைக்காக ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்திருந்த மாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசனின் வீடும், மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்டினுடைய வீடும் கடைசியாகத் தாக்கப்பட்டிருந்தன. அமைசசருடைய வீடு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, அவர் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் முறைப்பாடு செய்யாமலேயே அவர்கள் தாக்குதல் சம்பவத்தையடுத்து தனது வீட்டிற்கு வந்துவிசாரணைகள் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக அமைச்சர் ஐங்கரநேசன் கூறியிருக்கின்றார். இதில் இருந்து இந்தத் தாக்குதல் சம்பம் பற்றிய பின்னணியும், உண்மை நிலையும் தெரிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்hளர்.

இந்த வீடுகள் தாக்கப்பட்ட அதேநேரம் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீடடு கேட்டில் மலர் வளையமும், மலர்மாலையும் வைக்கப்பட்டு அவர் அச்சுறுத்தப்பட்டிருந்தார். உதயன் விடுதியில் தேர்தல் காலத்தில்; அவர் தங்கியிருந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த அவருடைய பதாதையொன்றும் கிழித்து தீயிடப்பட்டிருந்தது.

அடையாளம் தெரியாதவர்கள் யார்?

மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக் கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே, பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல்களை, யுத்த காலத்துச் சூழலைப் போன்று, அடையாளம் தெரியாத ஆட்களே செய்திருக்கின்றார்கள். யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகப் போகின்ற நிலையில் அமைதியும் சமாதானமும் நிலவுகின்றபோது இந்த அடையாளம் தெரியாத ஆட்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களை யார் அனுப்பி வைத்ததது என்பதைக் கண்டறிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இல்லையேல், அத்தகைய அடையாளம் தெரியாத ஆட்களின் மூலம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களால் சட்டரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் அச்சுறுத்தி அடக்கியொடுக்குவதில் திட்டமிட்ட வகையில் சக்தியொன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றே மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும். அத்துடன் மோசமான ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ வலிமையுள்ள ஓர் அரசு, யாரோ முகம் தெரியாதவர்களின் செயற்பாட்டை அடக்கியொடுக்க முடியாதவாறு பலவீனமடைந்திருக்கின்றது என்ற முடிவுக்கே அவர்கள் வரவேண்டியிருக்கும்.

மொத்தத்தில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் யுத்தம் முடிந்தபின்பும், பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன என்ற யதார்த்தத்தையே இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அத்துடன் அடக்குமுறைகளின் மூலம் மக்களுடைய உணர்வுகளை அடக்க முடியாது என்ற உண்மையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

-GTN

Tags: ,

Leave a Reply