குஜராத் முதலமைச்சரும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் அமித் ஷா. இவர் கடந்த 2009–ம் குஜராத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது அந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை பொலிசார் மூலம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே உள்துறை அமைச்சர் அந்த இளம்பெண்ணை கண்காணித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமித் ஷாவுக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், அது இரகசியமாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இணையதளத்தில் செய்தி வெளியாகியது.
தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மோடியோ, அமித் ஷாவோ நேரடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தால் பா.ஜ.கவின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 26-ம் திகதி ஓய்வு பெற்ற அகமதாபாத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் இருநபர் விசாரணை குழுவினை குஜராத் அரசு அமைத்தது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய அந்த இளம் பெண்ணுடன் மோடி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
2005-ம் ஆண்டு ‘ஷரத் உத்சவ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மோடி கட்ச் பகுதிக்கு வந்தபோது பெங்களூரை சேர்ந்த கட்டிடக் கலை நிபுணரான அந்த 27 வயது இளம்பெண்ணை மாவட்ட கலெக்டர் பிரதீப் சர்மா மோடிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
மோடி பங்கேற்க வந்த நிகழ்ச்சி மலைப் பகுதியில் தோட்டம் அமைப்பது தொடர்பானது என்பதால், ‘இந்த திட்டத்தை நவீனப்படுத்துவது தொடர்பாக நீங்கள் உங்கள் கருத்துகளை என்னுடன் எப்போது வேண்டும் என்றாலும் பகிர்ந்து கொள்ளலாம்’ என்று அந்த பெண்ணிடம் கூறிய மோடி, தனது தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அளித்துள்ளார்.
அதன் பின்னர் மோடிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் ஏராளமான கருத்து பரிமாற்றங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் பாதி உண்மை – பாதி பொய் என அரசியல் உள்நோக்கங்களுடன் வதந்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
















