இலங்கைப் படைக்கு இந்தியா பயிற்சியா? கொதிக்கின்றார் தமிழக முதலமைச்சர்

jaya4“இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியக் கடற்படை இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகின்றது என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கின்றது. இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.

இந்த விடயம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“இந்தியக் கடற்படை மூலம் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையறிந்ததும் நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். இவ்வாறு இந்திய மத்திய அரசு செயற்படுவது தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிரானது.

இலங்கைப் படையினருக்கு இந்தியக் கடற்படையால் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகின்றன என்று அறிந்தேன். தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்திய மத்திய அரசு இது போன்று தொடர்ந்து நடந்து வருகிறது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறித்து நான் பலமுறை தங்களுக்கு அறிவுறுத்தியிருந்தேன். ஆனால் இந்திய மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தியா இலங்கைக்கு எந்தவித இராணுவப் பயிற்சிகளையும் வழங்கக்கூடாது, அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது செயற்படும் இந்திய மத்திய அரசுக்கு எமது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றுள்ளது.

Tags: , ,

Leave a Reply