காணி உத்தியோகத்தர்கள் மூலம் மக்கள் காணிகள் அபகரிக்கப்படுகின்றது! வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

linganathan1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணித்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் காணிகள் பிரதேச செயலக காணி அலுவலர்களின் மூலம் அபகரிக்கப்படுவதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளார்.

இக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்த சகல மக்களும் அவர்களது காணிகளில் குடியமர்ந்து வருகின்றனர். தற்போது 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர்களது குடியிருப்பு காணிகள் நில அளவையாளர்களினால் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் அளக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந் நடவடிக்கைக்கு முன்பாக பின்வரும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. அவையாவன, 1983 ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்னர் 5 ஏக்கர் திட்டம் 3 ஏக்கர் திட்டம், 2 ஏக்கர் திட்டம், 1 ஏக்கர் திட்டம் என காணிகள் வழங்கப்பட்டு அதற்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
மற்றும் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் உரிமையாளர்களினால் நீண்ட காலப்பயிர்கள் நிரந்தர வீடுகள் கிணறுகள் என்பன அமைக்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் தற்போது நடைமுறையின் படி 1 ஏக்கர் என்று கூறி மிகுதி காணிகளை கையகப்படுத்தல் அல்லது சுவீகரித்தல் செய்யும் நடவடிக்கைகளை பிரதேச செயலகங்களில் உள்ள காணி அலுவலர்கள் ஊடாக மேற்கொள்ளப்படுவதை அவதானின்ன முடிகின்றது. 1982 தொடக்கம் 2009 வரையான கிட்டத்தட்ட 27 வருடங்கள் முறையான காணிக்கச்சேரிகள் நடைபெறாத காரணத்தினால் காணித்திட்டத்தில் வழங்கப்பட்ட காணிகளுக்கு நிரந்தர காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இதனை கருத்தில் எடுக்காது தற்போது இத் திட்டத்தில் வழங்கப்பட்ட காணிகளுக்கும் புதிய நடைமுறையில் உள்ளவாறு 1 ஏக்கர் வீதம் வழங்குவதற்கோ நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேபோன்று நகர்ப்பகுதியிலும் 4 பரப்பு என வழங்கப்பட்ட காணிகள் 2 பரப்பாக குறைக்கப்படுகின்றது. இந் நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் பிம்சவிய திட்டம் நடைமுறைப்படுத்தலுக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரிந்ததே. இத்திட்டத்தினை காணி அமைச்சரும் நிறுத்தபபட்டதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அதை நடைறைப்படுத்தாது புதிய பெயரில் மேற்குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதனை என்னால் அறிய முடிகின்றது.

எனவே இது தொடர்பான சரியான முடிவுகள் வரும்வரை தற்போது நடைமுறையில் உள்ள காணி உரிமைப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து என்தமிழ் இணையத்தள செய்தியாளர் கரிகாலன்

Tags: , ,

Leave a Reply