ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ – மூனிடம் ஜனாதிபதி மஹிந்த, சுயவிருப்பின் பேரில் வழங்கிய உறுதி மொழிகளை அரசு மீறிச் செயற்படுகிறது எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை மீறிக்கொண்டு ஜனாதிபதியால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றும் தெரிவித்தது.
இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் அதற்கு நட்பு மற்றும் உதவி புரிந்த நாடுகள் கூட இன்று கேள்வி எழுப்புகின்றன என சீனாவைக் கோடிகாட்டி கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் “இலங்கைக்கு எதிரான விமர்சனங்களின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களே இருக்கிறார்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறாயின் சீனாவிலும் புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றனரா” என்றும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதிக்கான செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையில் ஜனநாயகம் சிறப்பாக இடம்பெறுகிறது எனக் கூறமுடியாது. ஏனெனில், இலங்கையின் நிர்வாகம் பற்றி அதன் நண்பர்களும் அதற்கு உதவிபுரிந்த நாடுகளும் கேள்வி எழுப்புகின்றன.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பொதுநலவாய மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் சீனாவும் கேள்வியெழுப்பியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வந்த சர்வதேச நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் குறித்தே அதிக அவதானம் செலுத்துகின்றன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதால்தான் உலக நாடுகள் இவ்வாறு கூறுகின்றன.
நீலன் திருச்செல்வம் படுகொலை குறித்து நாம் அறிந்துள்ளோம். அதற்காக நாம் கவலையடைகிறோம். ஆனால் இந்தப் படுகொலைகளைக் காரணங்காட்டி அரசு தமது கடமை, பொறுப்பு மற்றும் சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து நழுவிச் செல்ல முடியாது – என்றார்.
















