“மனித உரிமை விவகாரம் இன்று அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் காலக்கெடுவை ஏற்று அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை” என்று நாடாளுமன்றில் சூளுரைத்தார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி செலவின தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
புலிகள் அமைப்பு போரில் தோல்வியடைந்திருந்தாலும் அதன் அரசியல் ரீதியிலான செயற்பாடுகள் இன்னமும் முன்னெடுக்கப்படுகின்றன. புலம்பெயர் அடிப்படைவாத குழுக்களிடம் நிதிப்பலம் இருக்கின்றது.
பொதுநலவாய மாநாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.
குறித்த அமைப்பில் தற்போது 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், சகல மாநாடுகளிலும் அனைத்து தலைவர்களும் பங்கேற்பதில்லை.
ஜனாதிபதிகள், உப ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 32 பேரும் இலங்கையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். அண்மைக் காலங்களில் நடைபெற்ற மாநாடுகளுடன் ஒப்பிடுகையில் இது சாதகமான பெறுபேறாகும்.
பொதுநலவாய மாநாட்டின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு விரைவில் நடைபெறவுள்ளது. கென்யா நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நடைபெறும். இதில் ஜனாதிபதியும் பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் பங்கேற்பார்.
பொதுநலவாய அமைப்பின் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அங்கத்துவ நாடுகளுடன் கலந்துரையாடப்படும்.
மனித உரிமைப் பிரச்சினை உங்களுக்கு மட்டுமல்ல, எமது நாடுகளுக்கும் இருக்கின்றன என்று பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பிரதிநிதிகள் சிலர் குறிப்பிட்டனர்.
இன்று மனித உரிமை விவகாரம் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. இதனால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளன. இது தொடர்பில் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் வளர்முக நாடுகளும் கவலை வெளியிட்டுள்ளன.
எனவே, ஏதாவது ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிறிதொரு நாடு தலையிடுவதை எவரும் விரும்புவதில்லை. அந்த அடிப்படையில் எமக்கு விதிக்கப்படும் காலக்கெடுக்களை நாம் நிராகரிக்கின்றோம். – என்றார்.
















