“வட பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை விட்டு இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும். அங்கு இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்” என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதியான கலாநிதி சலோகா பெயானி வடக்குக்கு பயணத்தை மேற்கொண்டு, போரின்போது இடம்பெயர்ந்த மக்களை உடனடியாகச் சொந்தக் கிராமங்களில் குடியமர்த்த வேண்டும் என வலியுறுத் தியிருந்தார். அத்தோடு, அங்கு இராணுவத் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் குறித்து அமைச்சரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்:
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இராணுவம்
பெயானி கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். போர்க் காலத்தின் போது இடம்பெயர்ந்த மக்களை நிச்சயமாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். இது அவர்களுக்கான உரிமையாகும். சில பகுதிகளைப் பாதுகாப்புக் காரணம் கருதி உடனே பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாதிருப்பினும் ஏனைய காணிகளை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்க அரசு முன்வரவேண்டும்.
அத்தோடு, வடக்கில் தமிழர்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்து இருப்பதாலும் காணிகளை மீள வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இராணுவத்தினர் மக்களின் காணிகளில் இருந்து உடனடியாக முகாம்களை அகற்றி அங்கிருந்து வெளியேற வேண்டும்.
அத்துடன், குறித்த காணிகளை இடம் பெயர்ந்தவர்களிடம் அல்லது குறிப்பிட்ட காணிக்குச் சொந்தக்காரர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
















