மீள்குடியேற்றம் செய்யப்படாத சம்பூர் மக்கள் அடைமழையால் தத்தளிப்பு: நீரில் மிதக்கும் கொட்டில்கள்

refugee3இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் உட்பட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் பிரதேச மக்கள் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய சம்பூர் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1200 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

போருக்கு பின்னர் மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்துள்ளதாக அரசாங்கம் அறித்துள்ள போதிலும் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம மக்களை சேர்ந்த சுமார் 825 குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

குறித்த கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவும் இந்திய உதவியுடனான அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒதுக்கீடு என காணிகள் அடையாளமிடப்பட்டுள்ளமே இதற்கான காரணமாகும்.

தமது சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றம் தடைபட்டுள்ள நிலையில் கிளிவெட்டி, கட்டப்பறிச்சான், மணல்ச்சேனை மற்றும் பட்டித்திடல் இடைத்தங்கல் முகாம்களில் 888 குடும்பங்கள் தற்போது தங்கியுள்ளதாக மாவட்ட மற்றும் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிலுள்ளவர்கள் மட்டுமல்ல சூரைக்குடாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள குடும்பங்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த தற்காலிக கொட்டில்களை புனரமைப்பதற்கு புனர்வாழ்வு அமைச்சினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டாலும் இராணுவத்தினால் அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் பழைய கூரைத்தகடுகள் மற்றும் மரங்கள் போன்றவை அதற்கு பயன்படுத்தப்பட்டமையால் அவை திருப்திகரமானதாக இல்லை என்பதே அம்மக்களின் பரவலான கருத்து. இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களிடம் அந்த பொறுப்பை ஓப்படைத்திருந்தால் அவர்களிடம் அதனை செய்வதற்கான மனித வளம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply