விடுதலைப் புலிகளை காரணம் காட்டி காலத்தைக் கடத்தாமல் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இன்று நாடாளு மன்றத்தில் இடம்பெற்ற போது, அதில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் இந்த கோரிக்கையினை விடுத்தார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம், வடக்கின் நகரம் மற்றும் நகரை அண்டிய பிரதேசங்களுக்கு மின்சார வசதிகள் கிடைத்துள்ளன.எனினும், வன்னிப் பிராந்தியத்தின் பல கிராமங்களில், இன்னமும் குப்பி விளக்குகள் மூலமே மாணவர்கள் கல்வி கற்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் கூறுகின்றபோது, அதனை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளாமல், மக்களின் பிரச்சனைகளாக எடுத்து தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறாக அல்லாமல், விடுதலைப் புலிகளைக் காட்டி வாக்குகளை பெறும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருவதாக செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தினார்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் உரையாற்றிய மின்சாரத்துறை பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர வடக்கு மக்களுக்கு சேவையாற்றவே வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில், நூற்றுக்கு 40 சத வீதமான மின்சார விநியோகமே பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.
எனினும், இன்று அந்த பகுதிகளில், 72 சத வீத மின்சார தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கும் மேலாக மின்சார தேவையை பூர்த்தி செய்திருக்க முடியும்.
எனினும், விடுதலைப் புலிகளால் சேதப்படுத்தப் பட்ட மின்சார கம்பங்கள் மற்றும் மின்சார தொகுதிகளை புனரமைப்பதிலேயே அதிக காலம் செலவிடப்பட்டதாக பிரதி அமைச்சர் பிரேம்லால் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
















