வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முன்னாள் பெண் கிராம சேவர் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் மிலேச்சத்தனமானது என வட மாகாணசபை உறுப்பினர் ஜி. ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிராம சேவகரை பார்வையிட்ட வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ம.தியாகராஜா ஆகியோர் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களுககு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு துன்பகரமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் இனந்தெரியாதோர் என்ற கருத்தியலில் முடிவுறும் விசாரணைகளாக மாறி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
மக்கள் சுமூகமான வாழ்வினை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான துப்பாக்கி பிரயோகங்களும் கொலைகளும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்களாகவே உள்ளது. சமூகத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் மீது நடத்தப்படும் இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் ஏனைய முக்கியஸ்தர்களையும் மக்களையும் கிலி கொள்ள வைப்பதாக உள்ளது.
எனவே கிராம சேவகர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
















