அனைத்துலக விசாரணைக்கு ஜனாதிபதியே முழுப்பொறுப்பு; ஐ.தே.க.

Mahinda5“இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முழுப்பொறுப்பு. இதைத் தவிர்க்க வேண்டுமாயின் சர்வதேசம் கூறுவதைப்போல் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்ளக விசாரணையை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றும் ஐ.தே.க. வலியுறுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரான சலோகா பெயானி முதல் இலங்கைக்கு பயணம் செய்த அமெரிக்க உயர் குழுவினர் வரை போர்க்குற்றம் தொடர்பில் அரசு உள்ளக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளனர்.

கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளும் “2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சுயாதீனமாக உள்ளக விசாரணையை இலங்கை நடத்த வேண்டும் என்றும் இல்லையேல் சர்வதேச விசாரணை உறுதி” என்றும் காலக்கெடு விதித்து, எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுபோன்ற அழுத்தங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தெரிவித்ததாவது:

சர்வதேசம் நாட்டுக்கு அழுத்தங்கள் கொடுக்கும் வகையிலான கருத்துகளை முன்வைப்பது தவறானதல்ல. ஏனென்றால் அரசு, போர் முடிவடைந்தவுடன் சர்வதேசத்தினருக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையேனும் இன்னமும் நடைமுறைக்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.

கொழும்பில் சென்ற மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போதும் சர்வதேச தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இது விடயத்தில் அரசு ஒருபோதும் பின் வாங்காது என்றும் உறுதியளித்தார்.

ஆனால், அரசு இதுவரையிலும் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து கூறிய ஒன்றையேனும் செயற்படுத்துவதாக தெரியவில்லை. இதனாலேயே சர்வ தேச சமூகம், அரசுக்கு அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரின் அரசுமே காரணமாகும். இவர்களின் செயற்பாட்டால்தான் இலங்கைக்கு சர்வதேசத்தின் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை மாற்றமடைந்து, நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் அரசு சர்வதேசம் கூறுவதைப் போன்று உள்ளக விசாரணையை, எவ்வித பாரபட்சமுமின்றி எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் மேற்கொண்டே ஆகவேண்டும்.

இதனால், எவருக்கும் பாதிப்பேற்படா வண்ணம் இருப்பதும் முக்கியமானதாகும். இல்லையயனில் சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையால் ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்றார்.

Tags: , ,

Leave a Reply