பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குரிய நீதியை நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் யாழில் பெண்கள் அமைப்பால் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
யாழ். நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக இன்று (09) காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணி மணிக்கூட்டு வீதி வழியாக வைத்தியசாலை வீதியை சென்றடைந்து, வைத்தியசாலை வீதியில் உள்ள யாழ்ப்பாண கல்லூரியின் உயர் கல்வி பட்டப்படிப்பு நிலையத்தில் முடிவடைந்தது.
இடர் முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு, வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான வலையமைப்பு, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆகியன இணைந்து இந்த பேரணியை நடாத்தின.
கடந்த 25ம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சாரத்தில் தாங்களும் இணைந்து கொள்ளும் முகமாகவே இந்த பேரணி நடாத்தப்படுவதாக பேரணியில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
இலங்கையில் எந்த இடமானாலும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றவுடன் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சாட்சியங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
சந்தேக நபர்களுக்கு 14 நாள் தடுப்பு காவல் வழங்கப்பட்டு பின்னர் சாட்சியங்கள் போதவில்லை என தள்ளுபடி செய்வதை தடுக்க வேண்டும்.
சட்ட வைத்திய பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் தடயங்கள் துரிதமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு சரியான முடிவுகளை அறிக்கைகளையும் உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கும் மற்றும் குடும்பத்தவருக்கும் வைத்திய அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும்.
19995 ,1999ம் ஆண்டு தண்டனை சட்டக்கோவை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு உச்ச பட்ச தண்டனைகள் வழங்குவதற்கான தண்டனை சட்ட கோவையை அமுல்படுத்த வேண்டும்.
பொறுப்புமிக்க நீதித்துறை அதிகாரிகள் உண்மையான நீதிக்காகவும் மனித நேயத்திற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து ஆதரவு வழங்கி சமூகத்தில் இவ்வாறன வன்முறைகள் அதிகரிக்காமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிஸ் நிலையங்களில் பெண்கள் சிறுவர் பிரிவு பலப்படுத்துவதும் அங்கே தமிழ் பேசும் பெண் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தலை உறுதிப்படுத்த வேண்டும்.
சமூகத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் அனைவரும் இணைந்து சம்பந்தப்பட்ட சட்டத்துறை வைத்திய துறை பாதுகாப்புத்துறை அரச அரச சார்பற்ற துறைகளுக்கு அழுத்தம் கொடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கான செயல்வாத பயன்களை தொடர வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை பேரணி சென்றவர்கள் முன்வைத்து இருந்தனர்.
















