ஐநூறுக்கும் அதிகமான பாகிஸ்தானைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இலங்கையில் தஞ்சம் கோரியுள்ளனர் என்றும் இவர்களுக்கு உதவிசெய்யுமாறும் இலங்கை கத்தோலிக்க பேரவை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் நீர் கொழும்பு, கல்கிஸை, மொரட்டுவ ஆகிய பகுதிகளில் இவர்கள் அநாதரவான நிலையில் தங்கியுள்ளனர்.
இலங்கையின் சட்டங்களின்படி அவர்கள் இங்கு தொழில்செய்ய முடியாது. ஆகவே, மூன்றாம் தரப்பு ஒன்றின் உதவியின்றி அவர்கள் வாழ முடியாது. இப்படியான நிலையில்தான் ஜனாதிபதி ராஜபக்வினதும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் வினதும் உதவியை இலங்கை கத்தோலிக்க பேரவை கோரியுள்ளது. இந்த விவகாரத்தை பரிசுத்த பாப்பரசரினதும் பிரதான திருச்சபைகளினதும் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் சமூக திட்டங்களுக்குப் பொறுப்பான வண. குரு குல சூரியா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைவிட இலங்கை தமக்குப் பாதுகாப்பான நாடு என்று நம்புகின்றனர் பாகிஸ்தானின் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது நிலைமை பரிதாபத்துக்குரியது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மிகத் தலைவரான பரிசுத்த பாப்பரசர் தலைமையிலான உலகளாவிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ரோமன் கத்தோலிக்க திருச்சபை விளங்குகிறது. பாகிஸ்தான் சனத்தொகையில் சுமார் ஒரு சதவீதமான -பத்துலட்சம் – கத்தோலிக்கர்கள் தாம் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் தமது தேவாலயங்கள் தாக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டு கின்றனர். 2009இல் கராச்சியில் 6 கிறிஸ்தவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. பாகிஸ்தானின் சுவாட் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் தலிபான்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது வரிவிதிப்பு, கத்தோலிக்கர்கள் கணிசமாக வாழும் பாகிஸ்தானின் வடமேற்கு புரண்டியர் மாகாணத்தில் இஸ்லாமியரியா சட்ட நடைமுறை போன்றவற்றால் கத்தோலிக்கர்கள் பலர் அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். கிறிஸ்தவ குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட் டுப்பேர் கொல்லப்பட்டனர். 50 வீடுகள் தாக்கி அழிக்கப்பட்டன. 2011 இல் பிரசித்தி பெற்ற சென். தோமஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. பாடசாலைகளை நிறுவி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பதும் மதகுரோதம் வளரக் காரணமாக இருக்கமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி 534 பாடசாலைகளும் 53 விடுதிகளும் 8 கல்லூரிகளும் 7 தொழில் நுட்பக் கல்லூரிகளும் பாகிஸ்தான் கத்தோலிக்க திருச்சபையின் பராமரிப்பில் இருந்து வந்தன.
பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதோர் ஜனாதிபதி பதவியையோ பிரதமர் பதவியையோ பிரதான பதினொரு பதவிகளையோ வகிக்கமுடியாது என்று சட்டம் கூறுகிறது. இதற்கு முன் சிறுபான்மைச் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அமைச்சரவையில் இடம்பெற்ற கத்தோலிக்க அமைச்சர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். ஆகவே பாகிஸ்தானில் கத்தோலிக்கர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
ஆனால் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இலங்கையில் புகலிடம் கோரியதுதான் வியப்பை அளிக்கிறது. இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கத்தோ லிக்கர்களில் பலர் குடும்பங்களாகவும் வந்துள்ளனர். இவர்களில் பாடசாலை செல்லும் வயதுள்ள சிறுவர் சிறுமியரும் உள்ளனர். இவர்களது கல்வி பாதிக்கப் படுகிறது. இளம் பெண்கள் பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இவர்கள் கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தில் தம்மைப் பதிவுசெய்துவிட்டு இலங்கையில் தங்கியுள்ளனர். அகதிகளைப் பொறுப்பேற்கும் நிலையில் இலங்கை இல்லையயன்றும் இவர்களுக்குப் பொருத்தமான மூன்றாவது நாடு ஒன்றைக் கண்டறியும்வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கமுடியும் என்றும் வண. குருகுலசூரியா கூறுகிறார். அச்சம் காரணமாக பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய இவர்களுக்கு கொதிக்கும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது. ஏனெனில் சமீபகாலமாக இலங் கையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் சிறுபான்மை இனங்கள் மற்றும் மதங்களின் பாதுகாப்பைக் கேள்விக்கிட மாக்கிவிட்டுள்ளன.
















