ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரு பிரேரணைகளின் போதும், இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின் பெயர் விவரங்களை வெளியிட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆதரவுச் செயற்பாட்டுக்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த இரு மனித உரிமைகள் கூட்டத் தொடர்களின் போதும், அமெரிக்க அரசினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இந்தப் பிரேரணையை எதிர்த்து இலங்கையைக் காப்பாற்றுவதற்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாடாளும்னறில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேசிய பாதுகாப்புக் கருதி இலங்கையை ஜெனிவாவில் காப்பாற்றும் குழுவில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை வெளியிட முடியவில்லை. எமது முயற்சிக்குப் பல தனிநபர்கள் ஆதரவளித்தனர், இப்போதும் ஆதரவளிக்கின்றனர்.
அந்தக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நியாயமற்றது என்பதை ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளுக்கு விளக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல நாடுகளுக்கு நானே நேரில் சென்று வெளிவிவிகார அமைச்சர்களைச் சந்தித்தேன். குறிப்பிட்ட நாடுகளின் தூதரகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டன. ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர்கள் குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர் – என்றார்.
















