13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தடையாகவும், மக்களுக்கான பணிகளை நிறைவேற்றுவதற்கு மாகாண சபைக்கு இடையூறாகவும் அரசு சார்ந்தவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இந்த உண்மைகளைச் சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறி எமது உரிமைகளைப் பெறவும் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றவும் முயற்சி எடுப்போம்.
இவ்வாறு புங்குடுதீவில் பொது மக்களைச் சந்தித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்.விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
தமிழர்களின் அரசு அமைய வேண்டும் என்பதில் தீவக மக்கள் உறுதியாக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவை நெருக்கடிகளின் மத்தியிலும் வழங்கியுள்ளீர்கள்.
தீவுப் பகுதியில் 90 வீதமான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ளன. பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து எங்களைத் தெரிவு செய்த மக்களது பாதுகாப்பு மற்றும் தேவைகளை முடிந்தவரை நிறைவேற்றுவோம்.
தீவுப் பகுதிக்கான வீதி கடந்த 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையிலேயே உள்ளது.
தீவுப் பகுதிகளில் காணப்படும் உள்ளக வீதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
அவற்றைப் புனரமைக்கவும் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கவும் கல்வி, விளையாட்டுத் துறைகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உறவினர் கட்சிக்காரர் எனப் பாராது நீதியாகவும் நியாய பூர்வமாகவும் எமது கடமைகள் முன்னெடுக்கப்படும்.
மாகாண சபைக்கென அடுத்த வருடத்தில் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும். அவற்றில் இந்தப் பிரதேசத்தின் தேவைகளுக்கான ஒதுக்கீடுகள் வழங்கப்படும். நீங்கள் இன்று விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அதை நிறைவேற்றவுள்ளேன் – என்றார்.
இதேவேளை புனரமைக்கப்பட வேண்டிய முன்பள்ளிக் கட்டடம், உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் தனியார் கல்வி நிலையம், 1925 இல் அமைக்கப்பட்டு தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் புங்குடுதீவு இளைஞர் கழகக் கட்டடம் என்பவற்றையும் அவர் பார்வையிட்டார்.
















