சம்பந்தன் – அகாஷி இன்று முக்கிய பேச்சு; கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில்

yasushi-akashiஇலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு வந்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இன்றிரவு முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் இல்லத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசின் அடக்குமுறைகள், இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றம், வலி.வடக்கு மீள்குடியமர்வு ஆகியவை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகாஷிக்கு எடுத்து விளக்கும் என்று தெரியவருகிறது.

இந்தச் சந்திப்பில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார் என்று தெரியவருகிறது. எனினும் அகாஷி வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவாரா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதான பிரதிநிதியாக யசூசி அகாஷி கடந்த 2002 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதன் பின்னர், 23 ஆவது தடவையாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply