தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அறிவித்துள்ளார்.
அந்நாட்டு தொலைக்காட்சியில் திங்கள்கிழமை அவர் பேசுகையில், “அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்று, இந்த பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, இந்தப் போராட்டங்கள் வன்முறையாக வெடிக்கக்கூடிய ஆபத்து உள்ளதால், முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்களிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
எனவே, ஜனநாயக மரபுப்படி பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்தல் நடைபெறும்´´ என்று அறிவித்தார்.
இந்நிலையில், 500 இடங்களைக் கொண்ட தாய்லாந்து கீழ்சபைக்கு இன்னும் 60 நாள்களுக்குள், பிப்ரவரி 2-ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனினும், மீண்டும் தேர்தல் நடத்தாமலேயே, “மக்கள் மன்றம்´ ஒன்றின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், தேர்தல் முடியும் வரையிலான இடைக்கால அரசில் தாமே பிரதமராகத் தொடரப்போவதாக யிங்லக் ஷினவத்ரா அறிவித்துள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், அந்நாட்டில் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
















